பாகிஸ்தானின் பொருளாதார தலைநகரமான கராச்சியில் சிலிண்டர் வெடித்ததில் இன்று மிக பெரிய விபத்து ஏற்பட்டது. சுர்ஜானி என்ற இடத்தில் நடந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சிலிண்டர் வெடிப்பின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், மேம்பாலத்தின் மீது சென்ற பேருந்து கிட்டத்தட்ட தீப்பிடிக்கும் அளவுக்கு இருந்தது. வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்துப் பார்த்தால், பல எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தது போல தெரிகிறது.


இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் குலாம் அப்பாஸ் ஷா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சாலையின் மறுபுறத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது எரிவாயு சிலிண்டர் விழுந்ததது வீடியோவில் பதிவாகியுள்ளது. 


அழுத்தத்தின் விளைவாக தீப்பிடித்த சிலிண்டர் பறந்த சென்று அந்த நபர் மீது விழுந்த போதிலும், அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். மேலும், குறிப்பிட்ட அந்த சிலிண்டர் வெடிக்காததால் சாலையின் மறுப்பக்கத்தில் விபத்து தவிர்கக்ப்பட்டது.


சிலிண்டர் வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் கிட்டத்தட்ட 50 அடி உயரத்திற்கு புகை பரவி கொண்டிருந்தது. இதனால், மக்கள் அச்சத்தில் இருந்தனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.


சமீபத்தில், ராஜஸ்தான் ஜோத்பூரில் ஒரு திருமண விழாவில் ஐந்து எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் அறுபது பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ‘வியாழக்கிழமை ஷெர்கர் அருகே உள்ள புங்ரா கிராமத்தில் நடந்தது. அந்த கிராமத்தில் உள்ள தக்த் சிங் என்பவரது வீட்டில் திருமணம் நடந்தது. 


திருமண ஊர்வலம் வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. 60 பேரில் காயமடைந்த 52 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 49 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றார்.


 






அதேபோல, ஆப்கானிஸ்தானின் அய்பக் நகரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.