பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்து பெண்மணியான தயா பீல் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் சிந்து மாகாணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தார்பார்கர் சிந்து பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட் உறுப்பினரான கிருஷ்ண குமாரி கொலை நடந்த கிராமத்திற்கு விரைந்துள்ளார்.
அந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து ட்விட் செய்துள்ள அவர், "தயா பீல். இவரின் வயது 40. கைம்பெண்ணான இவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது தலை உடலிலிருந்து பிரிக்கப்பட்டு, தலை முழுவதிலும் இருந்த சதையை காட்டுமிராண்டிகள் அகற்றி இருக்கின்றனர்.
சின்ஜோரோ, ஷாபுர்சாகரில் ஆகிய கிராமங்களின் காவல்துறையை சென்று சந்தித்தேன்" என பதிவிட்டுள்ளார். கொலை சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள லாப நோக்கமற்ற செய்தி நிறுவனமான The Rise News, "கொடூரமாக கொலை செய்யப்பட்டார் தயா பீல். இவரது வழக்கு ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படாது.
இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல்வாதிகளோ அல்லது சிந்து அரசாங்கமோ அறிக்கை வெளியிட மாட்டார்கள். குற்றவாளிகளை போலீசார் கைது செய்வார்களா? இந்துக்கள் அவர்களின் தாய் நாடான சிந்துவில் சம குடிமக்களாக நடத்தப்படுவார்களா?" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுபான்மையினரை பாதுகாக்கக் கோரி பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது. வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "இது பற்றிய செய்திகளை பார்த்தோம்.
ஆனால், இந்த வழக்கில் குறிப்பிட்ட விவரங்கள் எங்களிடம் இல்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நல்வாழ்வை பாகிஸ்தான் பாதுகாக்க வேண்டும். அது அவர்களின் பொறுப்பு" என்றார்.
கட்டாய மதமாற்றம், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களின் திருமண விவகாரத்தை முன்வைத்து இஸ்லாமிய மதகுரு மியான் அப்துல் ஹக்கிற்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக மியான் இருந்துள்ளார். இந்து மதத்தை சேர்ந்த சிறுமியை அவர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதால் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்த தடை, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை குறிக்கிறது என சர்வதேச மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.