இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவு தொடங்கிய கொரோனா உலகளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மக்களை ஆட்டிப்படைத்த கொரோனா ஒருவரின் வாழ்க்கையை திருப்பிப்போட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.


சீனாவில் ஒரு தம்பதி விவாகரத்து செய்யும் நிலையில் இருந்திருக்கின்றனர். ஆனால், கொரோனா காலத்தில் தன்னுடைய கணவர் காட்டிய அன்பின் காரணமாக அந்த முடிவையே திரும்ப பெற்றுள்ளார் அவரது மனைவி. அன்புடன் பார்த்து கொண்ட கணவரால் மனைவி உடல் நலம் தேறியுள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.  இது தொடர்பான செய்தி South China Morning Post-இல் வெளியானது.


கொரோனா மீண்டும் உச்சம் அடைந்து வரும் நிலையில், இந்த செய்தி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள ஜினாக்சி மாகாணத்தில் இந்த தம்பதியர் வசித்து வந்துள்ளனர். அந்த ஆணும் பெண்ணும் டிசம்பர் 14 அன்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். சீன சட்டப்படி, ஒரு மாத கூலிங் ஆஃப் காலத்தில் அவர்கள் இருந்துள்ளனர்.


அவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தபோது, ​​மனைவிக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் படுத்த படுக்கையானார். இதுகுறித்து பேட்டி அளித்த அந்த சீன பெண், "இந்த நேரத்தில் எனது கணவன் காட்டிய அக்கறையால் என மனம் மாறியது" என்றார். இதையடுத்து, விவாகரத்து செய்யும் முடிவை அவர் திரும்ப பெற்றுள்ளார்.


சீனாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாக தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.


அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


சீனாவில் பரவி வரும் கொரோனாவுக்கு BF.7 வகை கொரோனாவே காரணமாகும். சீனாவை போல இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. 


சீனா கொரோனா பரவல் குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதலை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. 


வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், இதுகுறித்து பேசுகையில், "சீனாவில் மாறி வரும் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலை கொண்டுள்ளது. பலர் தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான வண்ணம் இருக்கிறது. 


நோயின் தீவிரத்தன்மை, மருத்துவமனைகளில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது போன்ற தகவல்களை தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.