பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்குபவர்களை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பாக நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) திகழ்கிறது. எந்த நாடெல்லாம் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ, அவற்றுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதற்கு என தனியாக பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக கிரே பட்டியலில் இருந்த பாகிஸ்தான், அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதன் பணமோசடி எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தியுள்ளது என்றும் தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதற்கு எதிராக போராடி இருக்கிறது என்றும் எஃப்ஏடிஎஃப் தெரிவித்துள்ளது.


கிரே பட்டியலில் இருந்ததால், சர்வதேச நிதியம் (IMF), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு கடினமாக இருந்தது.


ஏனெனில், நிதி உதவி வழங்குவதற்கு முன்பு பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என பல கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. நிதி உதவி கிடைக்காததால் அதன் பணவீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்னைகள் அதிகமாகின.


நிகரகுவா நாடும் கிரே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மியான்மர் மிகவும் கடுமையான நெருக்கடிகள் விதிக்கப்படும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியா பட்டியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளது.


பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய எஃப்ஏடிஎஃப் அமைப்பின் 39 உறுப்பினர்களில் ஒருவரான இந்தியா, "ஐநா போன்ற சர்வதேச தளங்களில் இந்த விஷயம் எழுப்பப்பட்ட போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து அவர்களின் அமைப்புகளுக்கு நிதி அளிக்கிறது" என குற்றம் சாட்டி வருகிறது.


 






பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த எஃப்ஏடிஎஃப் கூட்டத்தின் போது பாகிஸ்தானை பட்டியலில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களுக்கு வழங்கும் நிதி உதவியை தடுத்து நிறுத்தல், பண மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என 34 அம்ச செயல் திட்டத்தை எஃப்ஏடிஎஃப் அமைப்பு உருவாக்கி அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானை வலியுறுத்தி இருந்தது. 


கடந்த ஜூன் மாதமே, பாகிஸ்தானை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சமிக்ஞைகள் தென்பட்டன. இதுகுறித்து எஃப்ஏடிஎஃப் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் அதன் இரண்டு செயல் திட்டங்களை கணிசமாக நிறைவேற்றியுள்ளது. ஆன்-சைட் சரிபார்ப்பு மட்டுமே நிலுவையில் உள்ளது" என குறிப்பிட்டிருந்தது.


1989 இல் நிறுவப்பட்ட எஃப்ஏடிஎஃப், சர்வதேச நிதி அமைப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அதன் 39 உறுப்பினர்களில் இரண்டு பிராந்திய அமைப்புகளான ஐரோப்பிய ஆணையம் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் இடம்பெற்றுள்ளன.