பாகிஸ்தான் வெள்ள நிவாரண முகாமில் இருந்து இந்து மக்களை துரத்தி அடித்த வீடியோவை எடுத்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,325 மனித உயிர்கள் மற்றும் 10 லட்சம் கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை இந்த கனமழை மற்றும் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கபட்ட இந்து பாக்ரி சமூக மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் நிலங்களை இழந்து நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க விடாமலும், அவர்களை அந்த முகாமில் இருந்தும் அதிகாரிகள் விரட்டியடித்துள்ளனர்.
இதை நஸ்ரல்லா கடானி என்ற பத்திரிக்கையாளர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பதிவில், சிந்து மாகாணத்தின் மீரப்பூர் மஹெல்லா என்ற பகுதியில் வசித்து வரும் பாக்ரி சமூகத்தினர், இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக நிவாரண முகாம்களில் இருந்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தால் வெளியேற்றியுள்ளனர். பாகிஸ்தான் கூட்டாட்சி நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதாகவும் அடிக்கடி கூறும் இந்து சிறுபான்மையினர் மீதான பாகிஸ்தான் அரசு மற்றும் அதிகாரிகளின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய மக்கள், “"நாங்கள் இந்துக்கள் என்பதற்காக வெளியேற்றப்பட்டோம். எங்களுக்கு உணவு, தண்ணீர் கூட தர மறுத்துவிட்டனர். நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று நினைக்கிறார்கள். இனி நாங்கள் எங்கே போவது? நம் குழந்தைகள் எப்படி வாழ வேண்டும்?" "நாங்கள் ஏழைகள், வெள்ளத்தில் எங்கள் வீட்டை இழந்தோம். மேலும் உள்ளூர் நிர்வாகம் நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கூறுகிறது. எங்களுடன் சிறு குழந்தைகள் உள்ளனர்." என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், இத்தகைய வீடியோவை பதிவிட்டு வெளியிட்ட பத்திரிக்கையாளர் நஸ்ரல்லா கடானியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரை 5 நாட்கள் விசாரணை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷியா என்ற 6 வயது சிறுமி பட்னி மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தார். அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உணவு தேடி சென்றபோது, கும்பல் ஒன்று அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது.