Pakistan Election: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.


பாகிஸ்தான் பொதுத்தேர்தல்:


பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பொதுத் தேர்தம் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்களும் சிறுபான்மை சமூகத்திற்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில் ஒரு வேட்பாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு இடத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், 265 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதுமட்டும் இன்றி, பல்வேறு இடங்களில் வன்முறை நடந்துள்ளது. பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


வன்முறைகளுக்கு மத்தியில் நடந்த வாக்குப்பதிவு:


வாக்குப்பதிவு முடிந்து 10 மணி நேரம் ஆகியம், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படாமல் இருந்தது. பெரும் தாமதத்திற்கு பிறகே, தேர்தல் ஆணையம் தலையிட்டு வாக்குகள் எண்ணும் பணியை தொடங்க வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


ஊழல் வழக்கில் சிக்கியதால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உட்கட்சி தேர்தலை நடத்தாத காரணத்தால் அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டுள்ளது. எனவே, சிறையில் உள்ள இம்ரான் கான் சார்பில், அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.


பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு வருகிறது. தேர்தல் நடைபெற்ற 265 இடங்களில் 125 இடங்களில் இம்ரான் கான ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறையில் இருந்து டஃப் கொடுக்கும் இம்ரான் கான்:


முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 44 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கு வருகிறது. லாகூரில் NA 123 தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமரும் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


 






இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப்புக்கு ராணுவத்தின் ஆதரவோடு இருப்பதாக கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் சிக்கி லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து, அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.


ராணுவத்தின் ஆதரவோடுதான், அவர் பாகிஸ்தான் திரும்பியிருப்பதாகவும் அவரை வெற்றிபெற வைக்க தேர்தலில் ராணுவம் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும், தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருவது நவாஸ் ஷெரீப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டி கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.