ஒரு நாளில் பணி நேரம் முடிந்தபிறகு அலுவல் தொடர்பான ஃபோன் அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை வழங்கும் முறையில் ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது. 


பணி நேரம் கடந்தும் வேலை:


அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேலை செய்து பொருளீட்டுவது என்பது காலப்போக்கில் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளது. வேலை, குடும்பம், உறவுகள், வாழ்க்கை என எல்லாவற்றையும் சமநிலையோடு அணுகுவதில் ஆண், பெண் என இருவருமே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டிலிருந்தே பணி செய்வது, ஸ்மாட்ஃபோன் இருந்தால் போதுமானது என்ற நிலையும் வந்தாயிற்று. ஸ்மாட்ஃபோன் உதவியோடு செய்ய முடியாதது என்ற ஒன்று இல்லவேயில்லை. வாட்ஸ் -அப், கூகுள் மீட், ZOOM உள்ளிட்டவை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கிடையிலான உரையாடை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது. 


வேலை பற்றிய அப்டேட்களை மெசேஜ் மூலமாக உயரதிகாரிக்கு/ முதலாளிக்கு தெரிவிப்பது என்பது பணி செய்தலின் தன்மையாக இருக்கிறது.


8 மணி நேர வேலை


பிரிட்டனில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு வேலை நேரம் மீதான அழுத்தம் அதிகரித்தது. முதலாளிகள் தொழிலாளர்களின் மீது கொஞ்சலும் அக்கறையில்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சி என சுய நோக்கத்துடன் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது உள்ளிட்ட பாதிப்புகளினால், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு நாளைக்கு ‘ 8 மணி நேரம்’ வேலை என்ற சட்டத்தை முன்வைத்தது.


உலக நாடுகளில் இது கொஞ்சம் கொஞ்சமாக அமலுக்கு வந்தது. அப்படியிருக்க, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் பல துறைகளில் வேலை செய்பவர்கள் அலுவலக பணி நேரம் முடிந்த பிறகும் கூட அது தொடர்பானவே யோசிப்பது, உரையாடுவது, உயரதிகாரிகளுடன் உரையாட வேண்டிய அவசியம் என நிலைமை இருந்து வருகிறது. 


எல்லாவற்றிற்கும் எல்லையுண்டு. அப்போதுதான் அதற்கான அழகும் ஆரோக்கியம் இருக்கிறது. அலுவலக பணியும் அப்படியே. ஒரு நிறுவனத்திற்கு உற்பத்தி நல்ல முறையில் இருக்க வேண்டுமெனில் தொழிலாளர்களின் நலனையும் வேலை நேரத்தையும் கவனித்து முறைப்படுத்த வேண்டும் என்பது பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 


வேலை நேரம் முடிஞ்சது - இனி நீ யாரோ..நான் யாரோ..


” அய்யோ...வேலை முடிச்சிட்டு வந்துட்டேன். ஆனாலும், இதுக்கெல்லாம் பதில் சொல்லுமே..” என்று வேலை பற்றிய அதிருப்தி ஏற்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வேலை நேரம் முடிந்தபிறகும் தொழில் ரீதியிலான அழைப்புகள், மெசேஜ்களுக்கு பதிலளிப்பது ஆரோக்கியமான முறை இல்லை என்று சொல்லப்படுகிறது.


அதை சட்டமாக கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அநாவசியமாக அலுவலகம் நேரம் முடிந்த பிறகு வரும் அழைப்புகளையோ, மெசேஜ்களை புறக்கணிக்க ஊழியர்கள் / பணியாளர்கள் உரிமை உண்டு என்பதே அது. அப்படி இதை மீறும் முதலாளிகள் அபராதம் செலுத்தவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.


புதிய சட்டம்:


ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் நலன் அமைச்சகம் "right to disconnect" என்ற நோக்கத்தோடு பணியாளர்களின் உரிமையை பாதுகாக்க புதிய சட்டவரைவு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பணி, வாழ்க்கை இரண்டையும் சமநிலையோடு எதிர்கொள்ள இந்தப் புதிய சட்டம் உதவும் என்று சொல்லப்படுகிறது. பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர் இந்தச் சட்டவரைவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என அந்நாட்டின் வேலைவாய்ப்பு  துறை அமைச்சர் டோனி ப்ரூக் ( Tony Burke) தெரிவித்துள்ளார். இதன் மூலம் பணியாளர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்வதும் அதிக நேரம் வேலை செய்வதும் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் கருத்து:


வாட்ஸ்-அப்-ல் வேலை என்பது சிக்கலானது. ‘ ஏன் இவ்வளவு நேரம் கழித்து ரிப்ளை பண்றீங்க?’, ‘வாட்ஸ்-அப்ல ஸ்டேட்ஸ் வைக்க தெரியுது; ஏன் குரூப்ல மெசேஜ் பார்க்கலையா?’ உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்தச் சட்டம் இடமளிக்காது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தொழிலாளர் நலன் புதிய சட்டவரைவு தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ்  (Anthony Albanese) கூறுகையில்,” எந்தவொரு பணியாளரும் / தொழிலாளரும் 24 மணிநேரத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அப்படியிருக்க, அவர்கள் 24 மணி நேரமும்  தொடர்புகொள்ள முடியும் அளவிற்கு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானது. அவர்கள் பதிலளிக்கவில்லை என்பதற்காக அபராதம் விதிப்பதும் நியாயமில்லை.” என்று கருத்து  தெரிவித்துள்ளார்.


இந்த சட்டவரைவு நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணி நேரத்திற்கு பிறகான அழைப்புகளை புறக்கணிக்கும் சட்டம் ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமலில் உள்ளது.