இலங்கையில் டிட்வா புயல் ருத்ர தாண்டவம் ஆடியதால், அந்நாடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் தத்தளித்த வருகிறது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பின. அதில் பாகிஸ்தானும் ஒன்று. ஆனால், பாகிஸ்தான் அனுப்பிய உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருந்தது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், நெட்டிசன்கள் பாகிஸ்தானை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இலங்கையை சூறையாடிய ‘டிட்வா‘ புயல்
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், இலங்கையை சூறையாடிவிட்டு, பின்னர் தமிழ்நாட்டிற்கு அருகே வந்து வலுவிழந்துள்ளது. ஆனால், இலங்கையை கடக்கும்போது, அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்ட வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 369 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில், இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக.
இலங்கை மக்களுக்கு உதவிய இந்தியா
இப்படிப்பட்ட சூழலில், டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. அங்கு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், 80 தேசிய பேரிடர் மிட்புப் படை வீரர்கள் மற்றும் 21 டன் நிவாரணப் பொருட்களுடன், இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும், இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கொழும்புவில் உள்ள பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில், இந்திய தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்தது. இந்திய பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கிவருகிறது.
பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் - காலாவதி என கண்டுபிடித்து வறுக்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில், இலங்கைக்கு உதவ நினைத்து, பாகிஸ்தானும் அந்நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது. இது தொடர்பாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தானில் இருந்து நிவாரண பொருட்கள், இலங்கையில் தவிக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. இலங்கைக்கு பாகிஸ்தான் என்றும் துணை நிற்கும் என கூறியுள்ளது. அதோடு, இலங்கைக்கு அனுப்பி வைத்த நிவாரண பொருட்களின் புகைப்படத்தையும் சேர்த்து இருந்தது. இன்றும் அங்க உதவிகள் வழங்கப்பட்டது குறித்து இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், நிவாரணப் பொருட்களில், அது காலாவதி ஆகும் தேதி 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காலாவதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி, பாகிஸ்தான் அவர்களை அவமானப்படுத்தி விட்டது எனவும் சில நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.
மேலும், இந்த புகைப்படம் வைரலானதையடுத்து, அதை பாகிஸ்தான் தூதரகம் உடனடியாக நீக்கியதற்கும் நெட்டிசன்கள் அவர்களை திட்டி வருகின்றனர்.