வெள்ளை மாளிகை அருகே, அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, அந்நாட்டு தேசிய காவல் படையை சேர்ந்த இருவர் மீது, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இதை பயங்கரவாத செயல் என விமர்சித்ததுடன், இது முழு நாட்டிற்கான குற்றம் என குறிப்பிட்டிருந்தார். மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப் போட் கோபமான பதிவு
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை போட்டிருந்த ட்ரம்ப், “தொழில்நுட்ப ரீதியாக நாம் முன்னேறியிருந்தாலும், குடியேற்றக் கொள்கை பலரின் ஆதாயங்களையும், வாழ்க்கை நிலைமைகளையும் அரித்துவிட்டது. அமெரிக்காவின் அமைப்பை முழுமையாக மீட்பதற்கு வழிவகுக்கும் விதமாக, மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் இடம்பெயர்வை நிரந்தரமாக இடைநிறுத்துவேன், பைடன் அரசால் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் குடியேற்றத்தை ரத்து செய்வேன், அதில் தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் கையெழுத்திட்டவர்களும் அடங்குவர்“ என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
மேலும், “உள்நாட்டு அமைதியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புலம்பெயர்ந்தோரை, குடியுரிமை இல்லாதவர்களாக மாற்றுவேன், மேலும், பொதுமக்களுக்கு இடையூராகவும், பாதுகாப்புக்கு ஆபத்தான அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் பொருந்தாத எந்தவொரு வெளிநாட்டினரையும் நாடு கடத்துவேன்.“ என்றும் ட்ரம்ப் தனது பதிவில் கூறியிருந்தார். அதோடு, “REVERSE MIGRATION(குடிபெயர்ந்தோரை வலுக்கட்டாயமாக சொந்த இடத்திற்கே திருப்பி அனுப்புவது) முறையால் மட்டுமே இந்த சூழ்நிலையை முழுமையாக சரிசெய்ய முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆப்கானியர்களுக்கு விசா நிறுத்தி வைப்பு
இந்த சூழலில், அமெரிக்க குடியேற்றத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானியர்களின் குடியேற்ற விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாகவும், மறு ஆய்வு முடியும் வரை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆட்சியில் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது அமெரிக்காவுக்கு வந்த ஒவ்வொரு வெளிநாட்டவர் குறித்தும் மறு ஆய்வு செய்ய, அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.