Pakistan Accident : பாகிஸ்தானில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணத்தின் கில்கித்தில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.


இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 15 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில்  அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியப்படவில்லை.


இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி இரங்கல் தெரிவித்துள்ளார்.






அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ”இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் படுகாயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும்" என தெரிவித்தார். 






இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியதாவது, " கில்கித்-பல்திஸ்தான் மாகாணத்தின் நேற்று நடந்த விபத்து அறிந்து மன வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் படுகாயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றார். இவரை தொடந்து பாகிஸ்தான் முதல்வரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, ஜனவரி 29ஆம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான மாகாணத்தில் வேன் ஒன்று லாரியுடம் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சமீப காலமாகவே பாகிஸ்தானில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மோசமான சாலைகளும், ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகிறது.