தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் சுமார் 1,300 பணியாளர்கள் கிட்டத்தட்ட 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று ஜூம் தலைமை நிர்வாகி எரிக் யுவான் நேற்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்தார்.




பாதிக்கப்பட்ட ஊழியர்களை கடின உழைப்பாளி, திறமையான சக ஊழியர்கள் என்று அழைத்த யுவான், அமெரிக்க்காவில் பணியாற்றும் நபர்களுக்கு பணிநீக்கம் தொடர்பாக அடுத்த 30 நிமிடங்களில் மின்னஞ்சலுக்கு தகவல் வரும். அமெரிக்கா அல்லது பிற நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


பாதிக்கப்பட்டவர்களுக்கு 16 வாரங்கள் அதாவது 4 மாதம் வரை சம்பளம் மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும், நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் சம்பாதித்த 2023 நிதியாண்டுக்கான வருடாந்திர போனஸ் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் ஊழியர்களுக்கான நிறுவனத்தின் ஆதரவு ஒரே மாதிரியாக இருக்கும் மேலும் அந்நாட்டில் விதிமுறைகளையும் பரிசீலித்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அவர், ஜூம் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படும் என அறிவித்த அதே வேலையில் தன்னுடைய சம்பளத்தில் 98% குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் உயர் அதிகாரிகள சம்பளமும் 20% குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


அந்த பதிவில் எரிக் யுவான், கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கின் போது மக்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க முடியாமல் இருந்த நிலையில் ஜூம் மூலம் தொடர்பு கொண்டனர். கொரோனாவின் போது ஜூம்க்கான தேவை அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 3 மடங்கு வள்ர்ச்சியை ஜூம் எட்டியது என குறிப்பிட்டார். இந்த தவறுகளுக்கு தானே காரணம் என்றும், தவிர்க்க முடியாத சூழல் காரணமாக இந்த பணிநீக்கம் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


உலகெங்கும் பணிநீக்கம்:


சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டமாக பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. 


அதேபோல, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம்  சரிவில் உள்ளதன் காரணமாக, அதன் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன.  அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதேபோன்று, ஸ்பாட்டிஃபை, பைஜூஸ் மற்றும் ஷாப்பி ஆகிய பெருநிறுவனங்களும், பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.