IND-PAK: பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் உலக நாடுகளுக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.

”நோ” சொன்ன பாகிஸ்தான்:

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது. அதன்படி, இந்தூஸ் நீர் ஒப்பந்தம், விசா ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், தூதரக் மூடல் என பாகிஸ்தானிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே, அதற்கு தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் விளக்கமளித்தது. ஆனாலும், அதை ஏற்க மறுத்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்நாட்டின் மறுப்பை  இந்தியா ஏற்காததற்கு கடந்த காலத்தில் நாம் கற்ற பாடங்களே காரணமாகும்.

மும்பை தாக்குதல் - 2008

இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தீவிரவாதிகள் தாக்குதலான மும்பை தாக்குதலின்போதும், அதற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், உயிரோடு பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப் நீதிமன்றத்தில் வாயை திறந்தபிறகு, அவர் பாகிஸ்தானின் பஞ்சாபில் பிறந்தவர் என்பது உறுதியானது. சொந்த விசாரணையின் முடிவில், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என பாகிஸ்தான் அரசே அறிவித்தது. மேற்கத்திய உளவுத்துறை நடத்திய விசாரணையில் நிதி, பயிற்சி ஆகியவற்றில் லஷ்கர்-இ-தொய்பாவின் பங்களிப்பும் அம்பலமானது.  தற்போதும் அதே அமைப்பு தான் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற பெயருக்கு பின்னாள் ஒளிந்து இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது. 

கார்கில் போர் - 1999

1999 கார்கில் போரின் போது, ​​இமயமலை முகடுகளில் நுழைந்தவர்கள் காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுபவர்களே, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் சத்தியம் செய்தது. ஆனால் கடந்த செப்டம்பரில் இந்த சம்பவம் குறித்து பேசிய தற்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி, “கார்கில் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்தியது தங்கள் ராணுவம் தான்” என பேசியுள்ளார்.

ஒசாமா பின்லேடன் தலைமறைவு

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தனது பிரதான எதிரியாக அறிவித்து தேடி வந்தது. ஆனால், அவர் தங்கள் நாட்டில் இல்லை என பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து வந்தது. இந்த சூழலில் தான் அபோதாபாத்தில் உள்ள பாக்கிஸ்தானின் ப்ரீமியர் மிலிட்டரி அகாடெமியிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு பாதுகாப்பான வீட்டில் வைத்து ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது. இதனால், மீண்டும் பாகிஸ்தானின் முகத்திரை சர்வதேச அளவில் கிழிந்தது.

இனப்படுகொலை - 1971

தற்போது வங்கதேசம் என அடையாளம் கணப்படும் கிழக்கு பாகிஸ்தான், முன்பு பாகிஸ்தானுடன் இணைந்து இருந்தது. தங்களுக்கு தனி நாடு வேண்டுமென போராட்டம் வெடித்தபோது, வங்கதேச மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான வங்கதேச மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் . ஆனால், தற்போது வரை பாகிஸ்தான் ராணுவம் அதனை மறுத்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தான், பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், அதனை இந்தியா ஏற்பதாக இல்லை.