அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், அரசு செயல்திறன் துறை என்ற புதுத் துறையை உருவாக்கி, அதற்கு தலைவராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை நியமித்தார். இந்நிலையில், அந்த துறையிலிருந்து தனது கவனத்தை டெஸ்லா பக்கம் திருப்ப இருப்பதாக சமீபத்தில் மஸ்க் கூறிய நிலையில், அதற்கு ட்ரம்ப் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா.? பார்க்கலாம்.

ட்ரம்ப் உருவாக்கிய அரசு செயல்திறன் துறை

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், முதல் நாளிலிருந்தே தனது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினார். அவர் வெளியிட்ட பல அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று, அரசு செயல்திறன் துறை உருவாக்கம். ஆம், அரசு, அரசு ஊழியர்களின் செயல்திறன் எந்த அளவிற்கு உள்ளது என்பதை ஆராயவும், அரசின் செலவினங்களை குறைப்பது உள்ளிட்ட பணிகளை செய்வதற்காகவும் இந்த துறையை ட்ரம்ப் உருவாக்கினார்.

அந்த துறையின் தலைவராக, உலக பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப். அவரது நம்பிக்கைக்கு ஏற்ப, எலான் மஸ்க்கும் DOGE என பெயரிடப்பட்ட அரசின் செயல்திறன் துறையின் சார்பாக பல அதிரடிகளை அரங்கேற்றினார். அரசுத் துறையில் தேவையில்லாமல் செய்யப்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்த மஸ்க், அதன் ஒரு பகுதியாக, ஏராளமானோரை வேலையை விட்டு அனுப்பினார். அதற்கு பலத்த எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் தனது பணியை அவர் செவ்வனே செய்து வந்தார்.

DOGE-லிருந்து விலகி இருக்கப்போவதாக அறிவித்த மஸ்க்

அமெரிக்க அரசு திறன்துறையில் தனது முழு கவனத்தை செலுத்தி பணியாற்றி வந்தார் எலான் மஸ்க். இந்த நிலையில், அவரது டெஸ்லா நிறுவனம் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. அதற்கும் ட்ரம்ப்பே ஒரு விதத்தில் காரணம் என கூறலாம். ஆம், அவர் விதித்த பரஸ்பர வரிகளால் பாதிக்கப்பட்டவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பல பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ட்ரம்ப்பின் வரியால், பாகங்களின் விலையும் அதிகரித்து, டெஸ்லா சிறிது நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், DOGE-ல் செலவிடும் தனது நேரத்தை கனிசமாக குறைக்கப் போவதாக எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார். தனது நிறுவம் கிட்டத்தட்ட 9 சதவீத இழப்பை சந்தித்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.

ட்ரம்ப்பின் பதில் என்ன.?

எலான் மஸ்க்கின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எலானின் முடிவு குறித்து கேள்விப்பட்டதாகவும், அவர் டெஸ்லாவிற்கு சென்றால், அந்த நிறுவனத்தின் பிரச்னைகள் கவனித்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். அவர் ஒரு அற்புதமான படைப்பை தருகிறார். அது(டெஸ்லா) ஒரு சிறந்த கார் என்றும், ஸ்டார்லிங்க்கும் சிறந்தது, அவர் வியக்க வைக்கும் மருத்துவ உபகரணங்களையும் தயாரிக்கிறார், அதனால், ஒரு கட்டத்தில் அவர் அந்த விஷயங்களை செய்ய அனுமதிக்கத்தான் வேண்டும் என்றும் பெருந்தன்மையோடு தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

மேலும், அரசு நிர்வாகத்தில் மஸ்க்கின் பங்கு குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், குறிப்பாக DOGE மூலம் அவர் செய்த செயல்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்திருந்தாலும், அரசியல் காரணங்களால் அவரது சிறந்த பங்களிப்பு மறைக்கப்படக் கூடாது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். மஸ்க் ஒரு சிறந்த தேசபக்தர் என்றும் அவர் விமர்சிக்கப்படக் கூடாது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.