அமெரிக்காவின் 5 மாநிலங்களில் ஒரே இரவில் சூறாவளி வீசியுள்ளது. அசுர பலத்துடன் சூறாவளி தாக்கியதால் கென்டக்கி மாகாணத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர் என்று கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர் கூறினார். இந்த சூறாவளி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக அவர் தெரிவித்துளளார். இதுவரை சூறாவளியில் சிக்கி 50 பேர் பலியாகி இருப்பதாகவும். இந்த பலி எண்ணிக்கை 70ல் இருந்து 100 வரை உயர்ந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கென்டகி வரலாற்றில் இப்படியொரு மோசமான சூறாவளியை தான் சந்தித்ததே இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.






கென்டக்கி பகுதியில் இயங்கிவரும் மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதேபோல் இல்லினாய்ஸில் உள்ள ஒரு அமேசான் கிடங்கில் பலர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் உள்ளே சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆர்கன்சாஸ் நகரமான மொனெட்டில் உள்ள முதியோர் இல்லத்தை சூறாவளி தகர்த்து எறிந்ததில் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் தான் உயிர்ப்பலி அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிசோரி மற்றும் டென்னசி நகரங்களும் சூறாவளியில் சிக்கி சின்னபின்னமாகியுள்ளன. சூறாவளியால் அடித்து வீசப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், மரங்ககளின் கிளைகள் சாலைகளில் சிதறிகிடப்பதுபோல் இருக்கும் வீடியோக்கள், படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 






சேதம் மிக அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகள் கணக்கில் காட்டியதை விட மிக அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கென்டக்கியில் மட்டுமல்ல அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் சுழற்றியடித்த சூறாவளியில் ஒரு தொழிற்சாலை பெருத்த சேதமடைந்ததாகவும், இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்த தொழிற்சாலையில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர், சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட எட்வர்ட்ஸ்வில்லே மக்களுடன் தான் துணை நிற்பதாக ட்வீட் செய்துள்ளார். சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உரிய நேரத்தில் செய்துதரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.