உலகையே அதிரவைத்த பயங்கரவாதிகளில் ஒருவர் ஒசாமா பின்லேடன். சவூதி அரேபியாவில் பிறந்த இவர், உலக நாடுகளை நடுங்க வைத்த செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார்.
அல்-கொய்தா என்ற சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை தொடங்கியவர். உலகம் முழுவதும் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர்.
கடந்த 2011ஆம் ஆண்டு, மே 2ஆம் தேதி, ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள அவரது வீட்டின் மதிலில் வைத்து அமெரிக்க பாதுகாப்பு படையினர் கொலை செய்தனர். இந்நிலையில், அவரின் மகன்களில் ஒருவர், பகீர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தனது தந்தை அவரை பின்பற்ற பயிற்சி அளித்ததாகவும் ஆப்கானிஸ்தானில் சிறுவயதில் துப்பாக்கியை சுட கற்று கொடுத்தார் என்றும் பின்லேடனின் மகன் தெரிவித்துள்ளார். ரசாயன ஆயுதங்களை சோதிக்க பின்லேடன் நாய்களைப் பயன்படுத்தியதாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.
கத்தாருக்கு சென்றுள்ள பின்லேடனின் நான்காவது மகன் உமர், தி சன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "நான் பாதிக்கப்பட்டவன். எனது தந்தையுடனான கெட்ட காலங்களை மறக்க முயல்கிறேன்" என்றார்.
மனைவி சைனாவுடன் தற்போது பிரான்ஸ் நாட்டின் நார்மண்டியில் வசித்து வரும் உமர், பின்லேடன் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்தார். பின்லேடன் தன் பணியை தொடர தேர்ந்தெடுக்கப்பட்ட மகன்தான் என்று கூறிய அவர், "நியூயார்க்கில் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 2001 இல் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பினேன்.
விடைபெற்று கொள்கிறேன் என நான் சொன்னேன். அவர் சரி என சொன்னார். எனக்கு அந்த உலகம் போதும். நான் வெளியேறியதில் அவர் மகிழ்ச்சியடையவில்லை" என்றார்.
பின்லேடனின் பற்றாளர்கள் மேற்கொண்ட ரசாயன பரிசோதனைகள் குறித்து பேசிய அவர், "அவர்கள் அதை என் நாய்களில் முயற்சித்தார்கள். நான் மகிழ்ச்சியடையவில்லை. என்னால் முடிந்தவரை எல்லா கெட்ட நேரங்களையும் மறக்க முயற்சிக்கிறேன். இது மிகவும் கடினம். நீங்கள் எல்லா நேரத்திலும் துன்பப்படுகிறீர்கள்" என்றார்.
தற்போது ஓவியராக உள்ள அவர், "எனது கலை நோயுக்கான சிகிச்சை போன்றது என நான் நம்புகிறேன். ஆப்கானிஸ்தானில் ஐந்து வருடங்கள் வாழ்ந்த பிறகு மலைகள்தான் எனக்கு பிடித்த தலைப்பாக இருந்தது" என்றார். அவரது ஓவியங்கள் ஒரு கேன்வாஸ் 8,500 பவுண்டுகள் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
நான் தீண்டத்தகாதவன் போன்ற பாதுகாப்பான உணர்வை அவை எனக்கு அளிக்கின்றன. எனது தந்தை என்னை அல்-கொய்தாவில் சேரும்படி ஒருபோதும் கேட்கவில்லை. ஆனால், அவருடைய பணியை தொடர நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மகன் என்று அவர் என்னிடம் கூறினார். அந்த வாழ்க்கைக்கு நான் பொருத்தமானவன் அல்ல என்று சொன்னதும் அவர் ஏமாற்றமடைந்தார்" என்றார்.
பின்லேடன் ஏன் அவரது வாரிசாக உங்களை தேர்ந்தெடுத்தார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது, ஒருவேளை நான் அதிக புத்திசாலியாக இருந்ததால் இருக்கலாம். அதனால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன்" என்றார்.