இருமல் மருந்தால் நிறைய குழந்தைகள் உள்பட 199 பேர் உயிரிழந்த நிலையில் இந்தோனேசியாவில் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இதனால் அங்கு போராட்டங்கள் ஒருபுறம் நடக்க, மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். கூடவே இழப்பீடும் கோரியுள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேசியா. இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருமல் மருந்து காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 199 பேர் இவ்வாறாக இறந்துள்ளனர். இவர்களில் நிறைய பேர் குழந்தைகள். இந்நிலையில் நாட்டின் சுகாதார அமைச்சகம், உணவு மற்றும் மருந்து முகமை ஆகியன மீது மக்கள் வழக்கு தொடரந்துள்ளனர். 7 மருந்து நிறுவனங்கள் வழங்கிய மருந்துப் பொருட்களால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞரான அவன் பூர்யாடி கூறுகையில், ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறப்புகள் பதிவாகின. அப்போதே அரசாங்கம் இதில் தலையிட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மேலும் அதே போன்ற மருந்துகளை விநியோகிக்காமல் தடுத்திக்க வேண்டும். ஆனால் அதை அரசாங்கம் செய்யவில்லை. அந்த மருந்துகளில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி ஃப்ரீஸ் வேதிப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனை அரசாங்கம் கவனித்திருக்க வேண்டும். நடந்த சம்பவத்திற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 பில்லியன் ருபயா 1,27,049 அமெரிக்க டாலரும், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளைப் பெற்றவர்களுக்கு 1 பில்லியன் ருபயா அதாவது 63,524 அமெரிக்க டாலரும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றார்.
காம்பியா சம்பவம்:
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் தான் அவர்கள் மரணம் அடைந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டது.
காம்பியா 66 குழந்தைகள் உயிரிழந்ததற்கு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், "காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு அசுத்தமான மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடுமையான சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் 66 குழந்தைகள் உயரிழந்ததரற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இளம் உயிர்களின் இழப்பு அவர்களது குடும்பங்களுக்கு மனவேதனைக்கு அப்பாற்பட்ட வலியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நான்கு மருந்துகள் அதாவது இருமல் மற்றும் சளி மருந்துகள் இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அந்நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு மேலும் விசாரணை நடத்தி வருகிறது.