Israel - Hmas War: இஸ்ரேல் மற்றும் காஸா அமைப்பினர் இடையேயான போர் 11வது நாளை எட்டியுள்ளது.


இஸ்ரேல் - ஹமாஸ் போர்


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் 11வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இஸ்ரேல் ராணுவத்தினர் காஸா பகுதியின் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில், ஹமாஸ்  அமைப்பின் ஷுரா கவுன்சிலின் தலைவரான ஒசாமா மஜினி உட்பட 50-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்.  அந்த அமைப்பின் அரசியல் பிரிவில் முக்கிய பங்காற்றி வந்த மஜினி, திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் பணய கைதிகளாக  பிடித்துவரப்படுபவர்களை கையாளுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார்.


தொடரும் தாக்குதல்: 


முன்னதாக திங்கட்கிழமை ஹமாஸ் பொது உளவுத்துறையின் தலைவரும் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் இருந்த ராணுவ கட்டளை மையங்கள் மற்றும் மோட்டார் ஷெல் நிலைகள் அழிக்கப்பட்டன. ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகி காஸா நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானோர் காயமடைந்துள்ளதோடு, உயிர் பயத்துடன் அந்த பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


ரஷ்யாவின் முயற்சி தோல்வி:


இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.  அந்த தீர்மானத்தில், போரை நிறுத்த வேண்டும். ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும். காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தில் ஹமாஸ் தாக்குதலை கண்டிக்கவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவு கிடைக்காததால், தீர்மானம் தோல்வியடைந்தது.


இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் பைடன்:


பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வாரத்தில் இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, காஸாவை ஆக்கிரமிக்கக் கூடாது மற்றும் அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வது தொடர்பாகவும் பைடன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்,  “இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் உலகயே அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறோம். இங்கிலாந்து உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் காணாமல் போயுள்ளனர்.  முடிந்தவரை,  இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் பிரிட்டிஷ் குடிமக்களுக்கும் நாங்கள் உதவுகிறோம்” என தெரிவித்துள்ளார்.


போரின் தொடக்கப்புள்ளி:


இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 1,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 200 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. தொடர்ந்து சர்வதேச அளவில் இது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.