இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினரிடையே போர் நடைபெற்று வருகிறது. முதலில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுளை ஏவி தாக்குதலை தொடங்கியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர். வீடுகள், கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் சேதமடைந்தது. பலரும் தெருவில் நிர்கதியாக நின்றுள்ளனர். ஹமாஸ் குழுவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரம் கடந்து பதிவாகியுள்ளது. போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இஸ்ரேலுக்கு உதவி செய்யும் வகையில் அமெரிக்கா தனது படை வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்பிவைத்துள்ளது. மேலும் இது போன்ற சூழலில் அமெரிக்கா உடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை தரை வழி தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் காசாவில் இருக்கும் 11 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி அறிவித்தது. ஆனால் மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் இப்படி திடீரென வெளியேறச் சொல்வது சாத்தியமான விஷயம் இல்லை என ஐ.நா தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் போரில் உள்ளது, இது சமரசம் செய்யும் நேரமில்லை என இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. காசாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 3 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.






இந்நிலையில் காசாவில் மும்முணை தாக்குதலை தொடங்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. நேற்றைய முன்தினம் இஸ்ரேல் பிரதமர் ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படை இந்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “மும்முணை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதலை நடத்த உள்ளோம். பல்வேறு தாக்குதல் நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்த ராணுவம் தயாராகி வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.






இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஒரு நேர்காணலில் இஸ்ரேலை,  காசாவை மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டாம் என்று எச்சரித்தார், ஹமாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 29 அமெரிக்கர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இதனை கூறியுள்ளார். மேலும், பெரும்பான்மையான பாலஸ்தீனியர்களுக்கும் ஹமாஸின் பயங்கரமான தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், அதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.