இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலின் புதிய பிரதமர் யார் என்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட்டுக்கே அதிக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலாவது பாலஸ்தீனத்துடன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வருமா என்று அமைதியை விரும்பும் சர்வதேச அமைப்புகளும், அப்பாவி பொதுமக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க பிரதமராகவிருக்கிறார் நெஃப்டாலி பென்னட்.



 

யார் இந்த நெஃப்டாலி பென்னட்?

இந்த உலகிலேயே பாலஸ்தீனம் தான் மிகப்பெரிய தீவிரவாதப் பகுதி என்று பேசியவர்தான் நெஃப்டாலி பென்னட். இவரது பேச்சே இவர் தீவிர வலதுசாரி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவர் யாமினா கட்சியைச் சேர்ந்தவர்.  49 வயதாகும் பென்னட்டின் பெற்றோர் அமெரிக்கர்கள். இவர் அரசியல் பிரவேசத்துக்கு முன்னதாக தொழில்நுட்ப ஜாம்பவானாக இருந்தார். மில்லியன் கணக்கில் லாபத்தைக் கொட்டிய நிறுவனத்தை நடத்திவந்தவர். வலதுசாரி கொள்கையால் ஈர்க்கப்பட்டு யாமினா கட்சியின் தலைவரானார். ஒருமுறை பென்னட் பேசும்போது நான் பிபியைவிட (பெஞ்சமின் நெதன்யாகூவை அங்கு அப்படித்தான் சுருக்கமாக அழைக்கிறார்கள்) வலதுசாரி சிந்தனை அதிகமாகக் கொண்டவர். ஆனால், நான் அவரைப் போல் எனது அரசியல் சுயலாபத்துக்காக பிரிவினைவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில்லை என்று கூறினார்.

சர்ச்சைக்குரிய மேற்குக்கரையை அரவணைத்துக் கொள்வதே பென்னட்டின் நீண்டநாள் கொள்கையாக இருக்கிறது. அவருடைய அரசியல் வாழ்வைப் பற்றி அலசும் வல்லுநர்களும் அதனை உறுதிப்படுத்துகின்றனர். பென்னட் 2013ல் தீவிர அரசியலில் இறங்கினார். அப்போதிருந்தே அவருடைய கொள்கை இதுவாகவே இருக்கிறது. 2013ல் யூத கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். சர்ச்சைக்குரிய அனைத்துப் பகுதிகளையும் (காசா, மேற்குக் கரை, கோலன் ஹைட்ஸ், கிழக்கு ஜெருசலேம்) உள்ளடக்கிய யூத தேசத்தை உருவாக்குவதே அவரின் இலக்கு.

 

நெதன்யாகூவை வீழ்த்திய 8 கட்சிகள்..

இஸ்ரேலில் ஆட்சி மாற்றத்துக்கு ஏதுவாக எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷா கவுன்சில் (Yesha Council) தலைவர் யேர் லேபிட் அறிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதன்படி வலதுசாரி யாமினா கட்சியின் தலைவர் நெஃப்டாலி பென்னெட் முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார். பின்னர் லேபிட்டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

நெதன்யாகூவுக்கு எதிராகத் திரண்டுள்ள இந்த எட்டுக் கட்சிகளும் அரசியல் கொள்கை ரீதியாக இடது, வலது, மையம் எனப் பல்வேறு கொள்கைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே நெத்தன்யாகூவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனர். இதனாலேயே, இஸ்ரேல் நெசட்டில் (இஸ்ரேல் பாராளுமன்றம்) நெதன்யாகூவை வெளியே அனுப்பப் போதிய ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது.