கலவரத்தால் சிக்கி தவிக்கும்  சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

அதிரடி காட்டிய இந்தியா:

ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் மூலம் இந்தியர்கள் மீட்கப்படும் புகைப்படங்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்திய அரசு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சில இந்தியர்கள் தேசிய கொடி ஏந்தி வந்தனர்.

Continues below advertisement

சூடானில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு ஆபரேஷன் காவேரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியா இரண்டு விமானங்களை ஜித்தாவில் நிலைநிறுத்தியுள்ளது. ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பலை போர்ட் சூடானிலும் நிலைநிறுத்தியது. இந்தியர்கள் ஜித்தாவை அடைந்த பிறகு தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். 

சூடான் முழுவதும் சுமார் 3,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.

சூடான் அரசியல் நிலவரம்:

அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.

சூடான் நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான ரேபிட் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் என்ற குழு இன்று ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது. அந்தக் குழுவானது முதலில் கார்த்தோம் விமான நிலையத்தைக் கைப்பற்றியது. பின்னர் அதிபர் மாளிகையையும் கைப்பற்றியதாக அறிவித்தனர். 

இதனால் சூடான் முழுவதும் கலவரம் மூண்டுள்ளது. ஒருபுறம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நடக்கிறது. இன்னொரு புறம் மக்களும் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். சூடானில் கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை, அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து மத்திய அரசோடு பேசி வருகிறோம் என்றார்.