பாங்காக்கில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


பொதுவாக விமான போக்குவரத்து உலகளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல காரணங்களால் அவ்வப்போது விபத்தில் சிக்கிக்கொள்வதும் நடந்து வருகிறது. அப்படியான ஒரு மோசமான சம்பவம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சிங்கப்பூர் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 211 பயணிகள் மற்றும் 18 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் பாங்காக் அருகே சென்ற போது நடுவானில் பயங்கரமாக குலுங்கியது. 


ஒரு நிமிடம் என்ன நடந்தது என பயணிகளும் சரி, விமான ஊழியர்களும் குழம்பி தான் போயினர். இந்த குலுக்கலில் பலருக்கும் காயம் ஏற்பட்டதால் உடனடியாக விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.  உடனடியாக தாய்லாந்தில் உள்ள உள்ளூர் மருத்துவ குழுவினர் உதவியுடன் காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் பிற பயணிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்யும்படி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 






உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், நிலைமையை சரிசெய்ய தங்கள் குழு ஒன்றை பாங்காக்கிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது


மேகக்கூட்டம் உரசியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சீரற்ற காற்று சுழற்சி உள்ள இடத்தில் இதுபோன்ற விமானம் குலுங்குவது வழக்கம். ஆனால் இது எப்போதாவது நடக்கும் அரிய நிகழ்வு தான்.


இந்த நேரத்தில் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். அதேசமயம் ரேடாரில் சீரற்ற காற்று இயக்கம் பற்றி சிக்னல் வராததே விபத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி சிக்னல் வரும் பட்சத்தில் விமானி பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வசதிகளும் செயல்முறையில் உள்ளது. முன்னதாக கடந்தாண்டு மே மாதம் டெல்லியில் இருந்து சிட்னி சென்ற விமானம் இதே போல் நடுவானில் குலுங்கியதில் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..