Queen’s symbol:


பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் III இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று வரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் புதிய மன்னராக அவர் அறிவிக்கப்பட்டார்.


அவரின் தாயாரும் மகாராணியுமான இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, சிம்மாசனம் வெல்ஸின் முன்னாள் இளவரசரான சார்லசுக்கு சென்றுள்ளது. லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ், முன்னாள் பிரதமர்கள், சார்லஸின் மனைவி கமிலா மற்றும் அவரது மூத்த மகனும் வாரிசுமான வில்லியம், ராஜ குடும்பத்தின் ஆலோசகர்கள் உட்பட பலர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பதவியேற்று கொண்டதையடுத்து பேசிய சார்லஸ், "இறையாண்மை மிக்க தலைவராக இருப்பதில் உள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை எலிசபெத் ஆழமாக அறிந்திருந்தார்.


வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் தன்னலமற்ற சேவைக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தவர் எலிசபெத். அதை நான் தொடர்வேன் என உறுதி அளிக்கிறேன். இறையாண்மை மிக்க நாட்டு மக்களின் பாசத்தாலும் விசுவாசத்தாலும் நான் நிலைநிறுத்தப்படுவேன் என்பதை நான் அறிவேன். என் அன்பு மனைவியின் ஆதரவால் மிகவும் ஊக்கம் பெற்றேன்" என்றார். இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உலகிலேயே ராணியாக நீண்டகாலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ள ராணி எலிசபெத்துக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின்போது, ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் பதவியேற்பின்போது அரியணையில் குறிப்பிடப்பட்டிருந்த ’EIIR' இந்த குறியீட்டுக்கு என்ன பொருள் என பலரும் அறிந்து கொள்ளும் வகையில் தேடி வருகின்றனர். 


EIIR பொருள் 


EIIR- குயின்ஸ் ராயல் சைஃபர் என்பது எலிசபெத் ரெஜினாவைக் குறிக்கிறது. "ரெஜினா" என்பது லத்தீன் மொழியில்  ராணி என்று பொருள்படும்.  மேலும், II என்பது இரண்டாம் எலிசபெத் என்பதைக் குறிப்பதாகும். இந்த சைபர் பிரிட்டன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு சிவப்பு  நிற அஞ்சல் தூண் பெட்டிகள் முதல் போலீஸ் சீருடைகள் வரை அனைத்திலும் இந்த சைபர் பதிவுசெய்யப்படும்.  தற்போது புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுள்ள நிலையில் புதிய சைபர் மாறும். மேலும் தூண் பெட்டிகளில் உள்ள சைபர்கள் புதிய பெட்டிகளில் மட்டுமே மாறும். அதாவது, ராணி எலிசபெத்தின் சைபர் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தூண் பெட்டிகளில் இருந்து நீக்கப்படாமல் அப்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முந்தைய மன்னர்களில் பலரின் சைபர்களும் இவ்வாறு இருப்பது குறிப்பிடத்தக்கது.