ஜலந்தரைச் சேர்ந்த சீக்கியரான அமர்ஜித் சிங், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த தனது முஸ்லீம் சகோதரியை 75 ஆண்டுகள் ஆன பிறகு, சந்தித்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது, அமர்ஜித் சிங் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்தார்.
இரு நாட்டு பிரிவினையின் போது, அவரது முஸ்லீம் பெற்றோர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அப்போது, அமர்ஜித் சிங்கை அவரது சகோதரியுடன் இந்தியாவில் விட்டுவிட்டு அவர்கள் சென்றுள்ளனர்.
புதன்கிழமை அன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சாஹிப்பில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அமர்ஜித் சிங் தனது சகோதரி குல்சூம் அக்தரை, சந்தித்தபோது அனைவரது கண்களும் கண்ணீர் வழிந்தன. சிங் தனது சகோதரியை சந்திப்பதற்காக விசா எடுத்து கொண்டு, அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார்.
65 வயதான குல்சூமால், சகோதரரான சிங்கைப் பார்த்த பிறகு தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே இருந்தனர். அவர் தனது சொந்த ஊரான பைசலாபாத்தில் இருந்து தனது மகன் ஷாஜாத் அகமது மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் தனது சகோதரனை சந்திக்க சென்றுள்ளார் குல்சூம்.
பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த குல்சூம், 1947 ஆம் ஆண்டில் ஜலந்தரில் உள்ள ஒரு புறநகரில் இருந்து தனது சகோதரர் மற்றும் ஒரு சகோதரியை விட்டுவிட்டு தனது பெற்றோர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததாக கூறினார்.
குல்சூம் பாகிஸ்தானில் பிறந்ததாகவும், இழந்த சகோதரன் மற்றும் சகோதரியைப் பற்றி தனது தாயிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டதாகவும் கூறினார். காணாமல் போன தனது குழந்தைகளை நினைவு கூரும்போதெல்லாம் தனது தாய் அழுது கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
அண்ணனையும் தங்கையையும் சந்திக்க முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தந்தை சர்தார் தாரா சிங்கின் நண்பர் ஒருவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்து அவரைச் சந்தித்ததாகவும் கூறினார்.
சர்தார் தாரா சிங்கிடம் தனது மகன் பற்றியும் இந்தியாவில் விட்டுச் சென்ற மகளைப் பற்றியும் அவரது தாயார் கூறியுள்ளார். அவரும் தங்கள் ஊர் பெயரையும், வீடு இருக்கும் இடத்தை பற்றியும் சொல்லி இருக்கிறார். சர்தார் தாரா சிங், பின்னர் படவான் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று தனது மகன் உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அவரது மகள் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அவரது மகனுக்கு அமர்ஜித் சிங் என்று பெயரிடப்பட்டது, அவர் 1947 இல் ஒரு சீக்கிய குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். சகோதரரின் தகவலை அறிந்து கொண்ட பிறகு, குல்சூம் சகோதரர் சிங்குடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் சந்திக்க முடிவு செய்தார். குல்சூம், கடுமையான முதுகுவலி இருந்தபோதிலும், தன் சகோதரனைச் சந்திப்பதற்காக கர்தார்பூருக்குச் சென்றுள்ளார்.
கர்தார்பூரில் குடும்பம் ஒன்று சேர்வது இது இரண்டாவது முறையாகும். மே மாதம், ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த ஒரு முஸ்லீம் தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு பெண், இந்தியாவைச் சேர்ந்த தனது சகோதரர்களை கர்தார்பூரில் சந்தித்தார்.