பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ள ஷெபாஸ் ஷெரிப், முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி முதலில் அவர் பிறப்பித்த உத்தரவு இனிமேல் அரசு ஊழியர்களுக்கு வாரம் இருநாட்கள் விடுமுறை என்பதை ஒருநாளாகக் குறைத்தார். மேலும் பணி நேரத்தையும் நீட்டித்துள்ளார்.


முதல் நாள் அலுவலகத்திற்கு வந்த ஷெபாஸ் ஷெரிப், காலை 8 மணிக்கே அலுவலகத்தில் இருந்தார். வழக்கமாக 10 மணிக்கு தான் அரசு ஊழியர்கள் வருவார்கள். அன்றும் அதேபோல் அலுவலகத்திற்கு வந்த அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் அனைவரும் காலை 8 மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என்ற உத்தரவும் பறந்துள்ளது.


பின்னர் நாட்டின் வானொலியாக ரேடியோ பாகிஸ்தான் வாயிலாக மக்களுக்காகப் பேசிய ஷெபாஸ் ஷெரீப், நாம் மக்களுக்கு சேவை செய்ய உள்ளோம். ஒரு துளி நேரம் கூட வீணாகக் கூடாது. நேர்மை, வெளிப்படைத்தன்மை, கடின உழைப்பு ஒவ்வொருவரும் பணியிலும் பிரதிபலிக்க வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரம். அதேபோல், குறைந்தபட்ச ஊதியம் ரூ.25,000, பென்சன் உயர்வு ஆகிய அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று பேசினார்.


இதற்கிடையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க, பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் ஷெரீப் கூட்டியுள்ளார். இவை ஒருபுறமிருக்க பிலாவல் பூட்டோ சர்தாரி நாட்டின் வெளியுறவு அமைச்சராக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ரானா சனுல்லா, மரியம் அவுரங்கசீப் ஆகியோர் முறையே உள்துறை அமைச்சராகவும், தகவல் துறை அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.




பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பாகிஸ்தான் நாட்டில் சில வாரங்களாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த நிலையில், பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவரின் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.


சமீப காலங்களாக சீனா, பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தான் தனது பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான அளவில் சீனாவையே நம்பியுள்ளது. ஆனாலும் பொருளதார நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் தான் பொருளாதார சீரழிவை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராகத் திரண்டன. அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.