பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமிக்ரான் கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. இது அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது . எனவே, தென்னாபிரிக்காவில்  ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது என்பதை விட, தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானிகள் இந்த ஒமிக்ரான் தொற்றை முதலில் கண்டறிந்தனர் என்ற சொல்லாடலே பொருத்தமானதாக அமையும். 


இந்த மாறுபாட்டை முதன்முதலில் உலகிற்கு தெரியப்படுத்தியதில், Lancet/BARC-SA என்ற தனியார் ஆய்வு மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக செயல்படும்  Raquel Viana-ன் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. 



நவம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் ஜோகானஸ்பேர்க் நகரை உள்ளடக்கிய கௌடெங் மாகாணத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எனவே, இந்தப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரிகளில் வேறுபாடுகள் உள்ளதா என்ற கோணத்தில் Raquel Viana ஆய்வை மேற்கொண்டார். சரியாக, நவம்பர் 19ம் இவர் மேற்கொண்ட ஆய்வுகளில், இந்த மாறுபாடு பல மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக இருப்பதைக் கண்டறிந்தனர்.  குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அனைத்தும்  ஸ்பைக் புரதத்தில் காணப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


வைரஸில் இத்தகைய அதிகப்படியான மாற்றங்களை அவர் எதிர்நோக்கவில்லை. இது, உலகலாவிய தடுப்பு நடவடிக்கைகளை கேள்விக் குறியாக்கிவிடும் என்று உணர்ந்த அவர், தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தில் பணிபுரியும் தனது நெருங்கிய நண்பருக்கு (Amoako) தகவல் அளித்தார்.   


Viana அனுப்பி வைத்த எட்டு மாதிரிகள் மரபியல் வேறுபாடுகளுடன் இருந்ததை Amoakoவும் கண்டறிந்தார். இருந்தாலும், பொதுவாக, உருமாற்றம் பெற்ற கொரோனா, சார்ஸ் - கோவ்- 19 வைரஸில் இருந்து இந்தளவுக்கு மாறுபடாது என்ற காரணத்தினால் முடிவுகளை வெளியே சொல்ல சிறுது தயக்கம் காட்டினார். ஆனால், அந்த வாரங்களில்  ஜோகானஸ்பேர்க் மற்றும் தொற்று பரவல் அதிகரித்து காணப்படும் பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இந்த மாறுபாடு உறுதியானது.   


டெல்டா இல்லை என்பதை எப்படிக் கண்டறிந்தனர்? 


S-gene dropout  மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ்,  டெல்டா மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால், கடந்தாண்டு இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகையுடன் ( B.1.1.7-Alpha) *இந்த மாதிரிகள் ஒத்துப் போகிறது. ஆனால், தென்னாப்பிரிகாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து B.1.1.7-Alpha வகை  தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. எனவே, இது புதுவகையான கொரோனா தொற்று மாறுபாடு என்பதை இவர்கள் உறுதி செய்தனர்.   மாறாக, கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள T478K, P681R and L452R மாற்றங்கள் டெல்டா வகையாகும். இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம் என்று கணிக்கப்படுகிறது. 






இதனையடுத்து, நவம்பர் 24ம் தேதி உலக சுகாதார நிறுவனத்திடம்  உருமாறிய ஓமைக்ரான் தொற்று குறித்த தகவல்களை தென்னாப்பிரிக்கா அரசு பகிர்ந்தது. இந்த, புதிய மாறுபட்ட கொரோனா வகையை கவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC) அந்த அமைப்பு வகைப்படுத்தியது.  கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும்.




காலப்போக்கில், சார்ஸ் கோவ் - 19 மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் வைரஸில் இருந்து உருமாறிய கொரோனா வகை தோன்றுகிறது. சார்ஸ்- கோவ் 19 என்பது ஆர்என்ஏ மரபியல் பொருட்களை கொண்டது. பொதுவாக, இவற்றின் மரபியல் பொருள் விரைவாகவும் அதிகமாகவும் மாற்றம் அடைந்துக் கொண்டேயிருக்கும். உண்மையில், ஆர்என்ஏ மரபியல் வைரஸ்களை வகைப்படுவதுத்துவது கூடி மிகவும் கடினமாகும்.


ஸ்பைக் புரதத்தில் எர்படும் மாற்றங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது:


கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கிறது. வைரஸின் ஸ்பைக் புரதம் மனித சுவாசக் குழாய் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் பிணைத்துக் கொள்கிறது. வைரஸ் தொற்றியவுடன், வைரஸ் மரபணு மனித உயிரணுக்களில் நுழைந்து, வைரசின் ஆயிரம் பிரதிகள் வெறும் பத்து மணி நேரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவான வைரஸ்கள் அருகிலுள்ள அணுக்களுக்கு குடியேறுகின்றன.


புதிய கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தைச் செயலிழக்கச் செய்தால் மட்டுமே தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இதனால் ஸ்பைக் புரதத்தில் உள்ள ஆன்டிஜென், தடுப்பூசிக்கு ஒரு முக்கியமான இலக்காகும். ஆன்டிபாடி ஸ்பைக் புரதத்தைத் தடுத்தால், வைரசால் அணுக்களில் நுழைந்து பல்கி பெருக முடியாது. தற்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட அநேக தடுப்பு மருந்துகளும் இந்த ஸ்பைக் புரதத்தை தங்கள் இலக்காக வைத்திருக்கின்றன. ஆனால், ஸ்பைக் புரதத்தில் அதிகப்படியான மாறுபாடுகளை ஏற்படுத்தி டெல்டா, ஒமைக்ரான் போன்ற தொற்று வகைகள் புதிதாக உருவாகி வருகிறது. 


தடுப்பு நடவடிக்கைகள்: 


தற்போது, பல்வேறு நாடுகளிலும், இந்த புதிய வகை உருமாறிய  தொற்றான ஓமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், பயணத் தடைகள் தேவையற்றது எனவும், இதன்மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தடைபடும் என்றும் உலக சுகாதார அமைப்பு  அமைப்பு முன்னதாக தெரிவித்தது. பயணத்தடைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியது.


இதனிடையே, உருமாறிய ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கமாறு மத்தியி அரசு மாநில அரசுகளை  கேட்டுக் கொண்டுள்ளது.