நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 16,764 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே போன்ற பெருநகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிகின்றன. பெருநகரங்களில் மக்களடர்த்தி அதிகமாக இருப்பதால், இந்தியா மூன்றாவது பெரிய அலைக்குள் ஏறத்தாழ நுழைவது உறுதி என்று ஆய்வாளார்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, மூன்றாவது பெரிய அலையை, அதிக மக்களடர்த்திக் கொண்ட இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் சமாளிக்குமா? என்ற கேள்வியும் முக்கியத்துவும் பெறுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ், இதுவரை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்த டெல்டா ரக வைரஸை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடும் வல்லமை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்னாபிரிக்காவில் முந்தைய அலையுடன் ஒப்பிடுகையில் (பீட்டா, டெல்டா ) ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரத்தன்மை சற்று குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா கொரோனா பாதிப்பு:
'Clinical Severity of COVID-19 Patients Admitted to Hospitals in Gauteng, South Africa During the Omicron-Dominant Fourth Wave' என்று பெயரிடப்பட்ட இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, லான்செட் என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கடெங் மாகாணத்தில் பீட்டா, டெல்டா, ஒமிக்ரான் ரக வைரஸ் பாதிப்புகளின் தீவிரத்தன்மையை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பீடு செய்தனர். தற்போது, உலக அளவில் பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் பாதிப்பு கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட போது, கடெங் மாகாணம் மிக மோசமான பரவலை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின் தரவுகள் பின்வருமாறு:
கடந்த ஒரு வருடத்தில் மட்டும், கடெங் மாகாணம் , பீட்டா, டெல்டா, ஒமிக்ரான் என்ற உருமாறிய வைரஸால் மூன்று பெருந்தொற்று அலையை பாதிப்பை சந்தித்திருக்கிறது. ஒவ்வொரு பெருந்தொற்று அலையின் போதும் முதல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
முதல் மாத பாதிப்புகள் விவரம் :
ஒரு மாத இடைவெளி | வைரஸ் ரகம் | தொற்று எண்ணிக்கை |
2020, 29 நவம்பர் முதல் 26 டிசம்பர் வரை | பீட்டா வைரஸ் ஆதிக்கம் | 41,046 |
2021 மே 2 முதல் 29 வரை | டெல்டா வைரஸ் ரகம் | 33,423 |
2021, நவம்பர் 14 முதல் டிசம்பர் 11 வரை | ஒமிக்ரான் வைரஸ் ரகம் | 133,551 |
முதல் மாதத்தில், மற்ற இரண்டு அலைகளை விட ஒமிக்ரானின் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
2. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
முதல் மாததத்தில்,
இரண்டாவது அலை (பீட்டா) - 18.9% (7,774/41,046)
மூன்றாவது அலை ( டெல்டா) - 13.7% (4,574/33,423)
நான்காவது அலை (ஒமிக்ரான்) - 4.9% (6,510/133,551)
பின்குறிப்பு: தென்னாப்பிரிக்காவில் முதல் அலை சார்ஸ் கோவ்- 19 வைரஸால் ஏற்பட்டது. அடுத்தடுத்த அலைகளை உருமாறிய கொரோனா வைரஸ் வகையால் ஏற்பட்டது. சார்ஸ் கோவ்- 19 என்பது சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸின் பெயர். கொரோனா வைரஸ் என்பது தொற்றின் பெயர்.
மற்ற இரண்டு காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரான் பரவலின் போது நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போக்கு குறைந்து காணப்படுகிறது. டெல்டா பரவலின் போது, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 13.7% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒமிக்ரான் பரவலில் இந்த எண்ணிக்கை 5க்கும் குறைவாக உள்ளது.
3. தீவிர அறிகுறிகள்:
பொதுவாக கொரோனா பெருந்தொற்றில், குறைவானவர்களுக்கு மட்டுமே நுரையீரல் பாதிப்பு ( நிமோனியா) ஏற்படுகிறது. அப்போது நுரையீரலில் உள்ள சிறு காற்று பைகள் வீக்கமடைகின்றன. கொரோனா நோயாளிகளில், சிலருக்கே மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும்போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும்.
எனவே, தீவிர அறிகுறிகள் கொண்டு வைரசின் தன்மையை மதிப்பிட முடியும்.
இரண்டாவது அலை (பீட்டா): 60.1% (4,672/7,774)
மூன்றாவது அலை ( டெல்டா ) : 66.9% (3,058/4,574)
நான்காவது அலை ( ஒமிக்ரான் ) : 28.8% (1,276/4,438)
நான்காவது அலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில், வெறும் 19% பேருக்கு மட்டுமே மூச்சுக் கோளாறு (தீவிர சிகிச்சை, மூச்சு விடுவதில் சிரமம், மரணம்) போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. டெல்டா பரவலின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 46% பேருக்கு தீவிர அறிகுறிகள் ஏற்பட்டன.
குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு:
முன்னதாக, கொரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற கூற்று இருந்து வந்தது. ஆனால், ஒமிக்ரான் வைரசின் தன்மை 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மிகக் கடுமையாக பாதிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
முதல் ஒரு மாதத்தில், மற்ற இரண்டு பெருந்தொற்று பரவலை விட ஒமிக்ரான் அலையால் அதிகப்படியான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் (படம் - மேலே). மேலும்,பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கபடும் எண்ணிக்கை டெல்டா, பீட்டா வைரஸ் அலையை விட ஒமிக்ரான் அலையில் கூடுதலாக உள்ளன (6.1%). ஆனால், ஒமிக்ரான் அலையில் குழந்தைகள் இறப்பு விகிதம் 1.3 ஆகா உள்ளது. இது, டெல்டா பரவலை விட குறைவானதாகும்.
4. ரத்த பிராணவாயு செறிவூட்டல் தேவை:
டெல்டா தொற்றின் அலையின் போது நோயாளிகளிடையே பிராணவாயுவின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளதை மேலே உள்ள படத்தில் காணலாம். மற்ற இரண்டு அலையுடன் ஒப்பிடும் போது, ஒமிக்ரான் தொற்று பரவலில் ரத்த பிராணவாயு செறிவூட்டல் (Supplement Oxygen) தேவை குறைந்து காணப்படுகிறது.
இந்தியாவில், டெல்டா இரண்டாவது அலையின் போது, பிராணவாயுவின் அளவு குறைந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக எண்ணற்ற நோயாளிகள் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சி முடிவுகள்:
முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரான் தொற்று பரவலில் தீவிர அறிகுறிகள் ஏற்படுவதற்கு 73% வாய்புகள் மிகவும் குறைவான அளவிலே உள்ளன. ஆனால், டெல்டா ரக வைரசை விட, இதன் பரவல் விகிதம் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இந்தியாவின் நிலை:
இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் வழிகாட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தும் அதே வேளையில், பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் இந்திய தற்போது கவனம் செலுத்தி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி வருகின்றன.
முன்னதாக, ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார்நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது. கூட்டத்தில், தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை விதிக்க வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும், ஆக்சிஸஜன் படுக்கைகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகம், மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3 முதல் தொடங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய்த்தன்மை உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மூன்றாவது டோஸ் வழங்கப்படுன் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுள்ளது.
மேலும், தகவல்களைப் பெற:
இதுபற்றி, விரிவாக bhekisisa என்ற மருத்துவ இதழின் ஆசரியர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.