வட அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் 23,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த  மனிதர்களின் காலடித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்காவில் முதல் குடியேற்றம் எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து நீண்டகாலமாக நிலவும் சந்தேகங்களுக்கு இவை விடைத்தேடி தரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 


முன்னதாக கடந்த  2009ம் ஆண்டு இதேபோன்ற கால்தடங்கள் அங்குள்ள வைட் சேண்ட் தேசிய பூங்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்டன. அப்போது அந்த கால்தடங்களில் சிக்கியிருந்த விதைகளைக் கொண்டு அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் தற்போது புதிய கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் முதன்முதலாக பழமையான ஈரநிலங்களில்  புதைபடிவ கால்தடங்களைக் கண்டறிந்த  பூங்காவின் வள திட்ட மேலாளர் டேவிட் புஸ்டோஸ் இது குறித்து பேசியுள்ளார். அதில் ஏற்கெனவே கண்டறிந்த அந்த கால்தடங்கள் பழமையானவை என தெரியும், ஆனால் சில கால்தடங்களின் மேல் விதைகளைக் கண்டறிவதற்கு முன்பு காலத்தை மதிப்பிட தங்களால் முடியவில்லை என்றும் தெரிவித்தார். 


மனித இனம் ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களிலிருந்து புலம்பெயர தொடங்கியதும் அமெரிக்காவுக்கு எப்போது முதன்முறையாக வந்தனர் எனும் கேள்வி நீண்ட காலமாகவே அமெரிக்கர்களிடத்தில் உள்ளது.  ஆசியாவையும், அலாஸ்காவையும் இணைத்த தரைப்பாலத்தின் வழியாக முதன்முதலாக புலம்பெயர்வு நிகழ்ந்தததாக பெரும்பாலான அறிவியலாளர்கள்  கருதுகிறார்கள். தற்போது இந்த கால்தட ஆராய்ச்சிகளின் மூலம் அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக கல் கருவிகள், புதைபடிவ எலும்புகள், மரபணு பகுப்பாய்வுகள் மற்றும் மற்ற  பிற ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளின் அடிப்படையில்  சுமார் 13,000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவில் முதல் மனித வருகைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் மற்ற சான்றுகளை விட புதைபடிவ கால்தடங்கள் மறுக்க முடியாத நேரடியான சான்றுகளாக இருக்கும் என அவர்கள் இந்த வாரம் அமெரிக்காவின் வெளியான அறிவியல் இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். 


மேலும் கால்தடங்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தபோது கடைசி  பனி யுகத்தின் போது வாழ்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கால்தடங்களாக இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றை நிறைய புகைப்படங்கள் எடுத்து பதிவு செய்வதன் மூலமும், அவற்றின் 3D மாடல்களை உருவாக்குவதன் மூலம்தான் பாதுகாக்க முடியும் எனவும் குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற சான்றுகள் கிடைப்பது உற்சாகத்தை ஏற்படுத்துவதாக வியன்னா பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் விஞ்ஞானி மற்றும் ரேடியோ கார்பன்-டேட்டிங் நிபுணர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் முதல் குடியேற்றம் எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து நீண்டகாலமாக நிலவும் சந்தேகங்களுக்கு இந்த கால்தடங்கள் விடைத்தேடி தரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.