பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸ் தேர்வான பிறகு நேற்று இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசினர்.
இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு இரண்டு  தனித்துவம் வாய்ந்த பரிசுகளை வழங்கியுள்ளார்.



கமலாவின் தாத்தா  பி.வி.கோபாலன் சம்பந்தப்பட்ட ஒரு பரிசை வழங்கியுள்ளார்.  கமலாவின் அம்மா வழி தாத்தாவான பி.வி.கோபாலன் இந்திய அரசு பணியில் மூத்த அதிகாரியாக இருந்தவர். பி.வி. கோபாலன் 1955 ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்தும் பின் 1966 ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி மத்திய மறுவாழ்வுத் துறையில் இணை செயலாளராக பணியமர்த்தப்பட்டது  குறித்தும் வெளியான அரசாணையின் நகலை கைவினை வேலைப்பாடுகளுடன் கூடிய ஃபோட்டோ ஃப்ரேமாக வழங்கியுள்ளார் மோடி.






அதேபோல அவருக்கு குலாபி மீனாகரி செஸ் செட்டையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றான வாரனாசியுடன் தொடர்புடையது. தவிர வாரனாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி. இந்நிலையில் இது குறித்து பேசிய அதிகாரிகள்  இந்த குறிப்பிட்ட செஸ் செட்டில் உள்ள ஒவ்வொன்றும் கைவினை வேலைப்பாடுகள் கொண்டது. அவற்றின் பிரகாசமான வண்ணங்கள் வாரனாசியின் பெருமையைக் குறிக்கிறது என தெரிவித்தனர். 


 






அதேபோல ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசனுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட குலாபி மீனாகரி கப்பலை பரிசளித்துள்ளார். அந்த கப்பலும் கைவேலைப்பாடுகளால் செய்யப்பட்டது. அதன் பிரகாசமான நிறங்கள் வாரனாசியின் சுறுசுறுப்பை காட்டுவதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவிற்கு, இந்தியாவையும் ஜப்பானையும் ஒருங்கிணைக்கும் வகையில் புத்தமதம் உள்ளதை உணர்த்தும் வகையில் சந்தனத்தால் ஆன புத்தர் சிலையை அவருக்கு வழங்கியுள்ளார். ஏற்கெனவே, பிரதமர் மோடி ஜப்பான் சென்றிருந்தபோது அங்குள்ள புத்த கோவில்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.