அமெரிக்காவின் 23 மாநிலங்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை தவிர கலிஃபோர்னியா, ஒரேகான் மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் மரண தண்டனை அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றப்படு வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டின் முதல் மரண தண்டனை நேற்று அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. 


அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் கடந்த 2005ஆம் ஆண்டு டோனால்ட் கிராண்ட் என்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் சிறையில் இருக்கும் தன்னுடைய காதலியை பிணையில் எடுக்க ஒரு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்காக ஒரு நட்சத்திர விடுதியில் இவர் திருடியுள்ளார். அப்போது அதை தடுக்க முயன்ற இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்த திருட்டு சம்பவத்திற்கு பிறகு இவரை காவல்துறையினர் கைது செய்தனர். 






அதைத் தொடர்ந்து இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இவர் இந்த குற்ற செயல் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இருந்தன. ஆகவே நீதிபதிகள் டோனால்ட் கிராண்டிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இந்த மரண தண்டனையை எதித்து கிராண்ட் பல முறை மேல்முறையீடு செய்தார். அந்த வழக்குகள் அனைத்தும் அண்மையில் முடித்து வைக்கப்பட்டது. மேலும் ஒக்லஹோமா மாநிலத்தில் 2015ஆம் ஆண்டு நிறையே பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்காரணமாக 2015ஆம் ஆண்டு முதல் அங்கு மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. 2021-ஆம் ஆண்டு அந்த தடைகள் நீக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து நேற்று காலை டோனால்ட் கிராண்டிற்கு விஷ ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் ஒரு சில பகுதிகளில் மரண தண்டனையை விஷ ஊசி செலுத்தி நிறைவேற்றப்பட்டு வருகிறது.


அமெரிக்காவில் பல பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பல அமைப்புகள் போராட்டம் செய்து வருகின்றன. அமெரிக்கா முழுவதும் இந்த மரண தண்டனை தடை செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 800 இமெயில்கள்.. மாணவியின் நிர்வாண படங்கள்.. காதலியால் சிக்கிய கணித ஆசிரியர்