உலக அளவில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதற்கு நேர்மாறாக ஜப்பான், ரஷியா, வடகொரியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.


"அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்"


இந்த நிலையில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், அந்நாட்டு பெண்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கண்களில் கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டு பேசும் வடகொரிய அதிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பெண்களும் வடகொரிய அதிபரின் பேச்சை கேட்டு அழுகின்றனர். அப்போது பேசிய கிம் ஜான் உன், "பிறப்பு விகிதங்கள் குறைவதைத் தடுப்பதும் குழந்தை பராமரிப்பும் தாய்மார்களுடன் பணிபுரியும் போது நாம் கையாள வேண்டிய கடமைகள்.


தேசத்தை வலுப்படுத்துவதில் தாய்மார்களின் பங்குக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கட்சி பணி, தேச பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது தாய்மார்களை பற்றியே நினைப்பேன்" என்றார்.


ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில், வடகொரியாவின் பிறப்பு விகிதம், 1.8ஆக பதிவாகியுள்ளது. அதாவது, ஒரு பெண்ணுக்கு 1.8 குழந்தைகள் பிறக்கிறது. வட கொரியாவின் அண்டை நாடுகளை ஒப்பிடுகையில், வட கொரியாவில் கருவுறுதல் விகிதம் அதிகம் பதிவாகியுள்ளது. 


வட கொரியாவில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்:


இருப்பினும், வட கொரியாவை போல அதன் அண்டை நாடுகளிலும் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் 0.78ஆக குறைந்துள்ளது. ஜப்பானில் கருவுறுதல் விகிதம் 1.26ஆக குறைந்துள்ளது.


 






எட்டு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் பேசியிருந்தார். "ரஷிய பெண்கள், எட்டு குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். பெரிய குடும்பத்தை உருவாக்குவதை வழக்கமாக கொள்ள வேண்டும். நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொள்ளும் வழக்கத்தை ரஷியாவில் பல இனக்குழுக்கள் பின்பற்றி வருகின்றன.


ரஷிய குடும்பங்கள், எங்கள் பாட்டி மற்றும் கொள்ளு பாட்டிகளில் பலருக்கு ஏழு, எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்வோம். இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்களாக இருப்பதை வழக்கமாக மாற்ற வேண்டும்" என ரஷிய அதிபர் தெரிவித்திருந்தார்.