North Korea Rules: வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், வடகொரியாவில் பொதுமக்களுக்கு ஏராளமான நூதன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வடகொரியாவும் - கட்டுப்பாடுகளும்:
கிம் ஜாங் உன்னின் தலைமையிலான கம்யூனிச ஆட்சி நடைபெறும் வடகொரியாவில், அடிக்கடி கடுமையான மற்றும் அசாதாரண சட்டங்களை அமல்படுத்துவது வழக்கமாகியுள்ளது. இந்த சட்டங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் தேர்வுகளுக்கு கூட நீட்டிக்கப்படுகிறது. குறிப்பாக அங்கு பிரபலமான உலகளாவிய ஃபேஷன் மற்றும் அழகுசாதனப் பிராண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வடகொரிய அரசு சிவப்பு நிற லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயத்திற்கு தடை விதித்துள்ளது.
சிவப்பு உதட்டுச்சாயத்திற்கு தடை ஏன்?
சிவப்பு நிறம் கம்யூனிசத்துடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தாலும், வட கொரியா சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்துள்ளது. காரணம் அந்த நிறத்தை முதலாளித்துவத்தின் அடையாளமாக கிம் ஜாங் உன் கருதுகிறார். அதோடு, சிவப்பு உதட்டுச்சாயம் அணிந்த பெண்கள் அவர்களை மிகவும் கவர்ச்சியாகக் காட்டலாம் என்றும், இந்த நடவடிக்கை எளிமையாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிரானது எனவும் அரசு தரப்பு கருதுகிறது. எனவே சிவப்பு நிற உதட்டுச் சாயத்திற்கு தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், அதிகப்படியான மேக்கப் (ஒப்பனை) வட கொரியாவில் வெறுக்கப்படுகிறது மற்றும் மேற்கத்திய செல்வாக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே, பெண்கள் குறைந்தபட்ச ஒப்பனை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
நீளும் தனிமனித கட்டுப்பாடுகள்:
வட கொரியாவின் பொதுமக்களின் தனிப்பட்ட தோற்றத்தின் மீதான கட்டுப்பாடு சிவப்பு உதட்டுச்சாயத்திற்கு தடை விதிக்கப்பட்டதை தாண்டியும் நீள்கிறது. முதலாளித்துவ சித்தாந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல பொருட்கள் மற்றும் பாணிகள் அங்கு தடை செய்துள்ளன. அதில், உடலோடு ஒட்டக்கூடிய ஸ்கின்னி ஆடைகள், நீல நிற ஜீன்ஸ், உடலில் கம்மல் போன்ற அணிகலன்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் நீளமான கூந்தலை பராமரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பால் அனுமதிக்கப்பட்ட சிகை அலங்காரங்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
இதற்கெல்லாமா தடை..!
சில தடைகள் அரசின் சித்தாந்தத்தையும் தாண்டி தனிப்பட்டவையாக உள்ளன. கறுப்பு ட்ரெஞ்ச் கோட் அல்லது ஜாங் உன்னின் சிகேட்சர் ஸ்வீப்ட்-பேக் ஹேர் ஸ்டல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை போன்று, பொதுமக்கள் உடை அணிவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதிசெய்ய, "க்யுச்சால்டே" அல்லது பேஷன் போலீஸ் உள்ளது. இவர்கள் பொதுமக்களை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள்.
விதிகளை மீறினால் என்ன நடக்கும்?
நீல ஜீன்ஸ் அணிவது போன்ற இந்த விதிகளை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தண்டிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பொது இடங்களில் நிறுத்தப்படலாம். விதிகளை மீறியவர்களின் ஆடைகள் பொது இடங்களில் கிழிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.