கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாத வண்ணம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி வட கொரியா கடந்த 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் முழு வீச்சில் சோதனை நடத்தி வருகிறது


தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியா:


சர்வதேச அளவில் தனிமைப்பட்டிருக்கும் வடகொரியா ஏழாவது அணு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.


கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், தென் கொரிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் தங்கள் வருடாந்திர ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னதாக பூர்வாங்க பயிற்சிகளைத் தொடங்கினர்.


இந்த ராணுவ பயற்சி, வட கொரியாவை ஆத்திரமூட்டின. இது அவர்கள் படையெடுப்புக்கான ஒத்திகையாகக் கருதினர். ஏவுகணை சோதனையின் காரணமாக அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.


வட கொரியா ஏவுகணை சோதனை:


இந்நிலையில், இன்று அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏவி வட கொரியா சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம், அமெரிக்காவும் தென் கொரியாவும் மீண்டும் கூட்டு போர் பயற்சியில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து, கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தென் கொரியா ராணுவத்தின் இணை முப்படை தளபதி கூறுகையில், "கடற்கரையின் கிழக்கு பகுதியை நோக்கி வட கொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏவி உள்ளது" என்றார். இதை உறுதி செய்யும் விதமாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் இன்று காலை ட்வீட் செய்தது.


இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஜப்பானிய கடலோர காவல்படை, "ஏவப்பட்ட ஏவுகணை ஏற்கனவே கீழே விழுந்துவிட்டதாகத் தெரிகிறது"


நேற்று, அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு விமான போர் பயற்சியில் ஈடுபட்டது. அதில், குண்டுகள் மற்றும் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக, வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவு சோதனை செய்ததற்கு பதிலடியாக தென் கொரியா போர் பயற்சியில் ஈடுபட்டது.


முன்னதாக, பதற்றத்தை தணிக்கும் வகையில், கடந்த 2018இல் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டனர். இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


ஏற்கனவே, ரஷியா - உக்ரைன் போர் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வட கொரியாவின் இந்த செயல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.