Brazil Floods : பிரேசிலில் மழை வெள்ளத்தால் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மாகாணத்தின் வடக்கில் பல நகரங்களைத் தாக்கிய வெள்ளத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பிரேசிலில் 600 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் 23 பேர் உயிரிழந்தது மட்டுமின்றி 100க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். 


பிரேசிலின் வடக்கு சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த மழை வெள்ளத்தில் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும் பெர்டியோகா நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் 50 வீடுகள் இடிந்துள்ளதால் அதில் இருந்த மக்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.  இதனை அடுத்து, மழை வெள்ளத்தால் 23 பேர் உயிரிழந்த நிலையில், ராணுவத்தின் ஆதரவை ஆளுநர் கோரியதால், நோன்புக்கு முந்தைய கார்னிவல் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. சாவ் பாலோவின் மாநில ஆளுநர் டார்சிசியோ டி ஃப்ரீடாஸ் கடற்கரையை ஒட்டிய ஐந்து நகரங்களில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.


சாவோ செபஸ்டியாவோவின் மேயர் ஃபிலிப் அகஸ்டோவின் கூற்றுப்படி, வெள்ளத்தில் இதுவரை குறைந்தது 23 பேர் இறந்துள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் 338 பேர் சாவ் பாலோ நகரின் வடக்கே கடலோரப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கார்னிவர் திருவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு வேடங்கள் அணிந்து நடனமாடியபடியே பொதுமக்கள் கலைஞர்களுடன் ஊர்வலமாக சென்று கொண்டாடினர். மேலும், செல்லப்பிராணிகளும் அணிவகுத்து சென்றன. 


ப்ளோகாவோ எனப்படும் கார்னிவல் திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டர். இந்த திருவிழாவானது மழை வெள்ளத்தால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் பெட்ரோபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.