வட கொரியா, இரண்டு குரூஸ் (கப்பலிலிருந்து ஏவப்படும்) ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா கடந்த ஒரு மாதமாக, எந்த வித சோதனையும் நடத்தவில்லை.


 






இதுகுறித்து  தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் மட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், "இன்று அதிகாலையில், தென் பியோங்கன் மாகாணத்தின் ஒன்சோனில் இருந்து மேற்குக் கடலில் வட கொரியா இரண்டு கப்பல் ஏவுகணைகளை ஏவியதை கண்டறிந்தோம். ஏவுகணையின் தூரம் போன்ற விரிவான விவரக்குறிப்புகளை அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவ அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார்.


ஐக்கிய நாடுகள் சபை தடை விதிக்காத குரூஸ் ஏவுகணையை வடகொரியா ஜனவரி மாதம் முதல் சோதனை செய்யவில்லை. வடகொரியா கடைசியாக ஜூலை 10 அன்று ஆயுத சோதனையை நடத்தியது, அப்போது, ராக்கெட் லாஞ்சர்களை ஏவி சோதனை நடத்தியது.


2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாத வண்ணம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை முழு வீச்சில் ஏவி வட கொரியா ஜனவரி முதல் சோதனை நடத்தி வருகிறது.


சர்வதேச அளவில் தனிமைப்பட்டிருக்கும் வடகொரியா ஏழாவது அணு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில், தென் கொரிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் தங்கள் வருடாந்திர ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னதாக பூர்வாங்க பயிற்சிகளைத் தொடங்கினர்.


இந்த ராணுவ பயற்சி, வட கொரியாவை ஆத்திரமூட்டின. இது அவர்கள் படையெடுப்புக்கான ஒத்திகையாகக் கருதினர். ஏவுகணை சோதனையின் காரணமாக அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. முன்னதாக, பதற்றத்தை தணிக்கும் வகையில், கடந்த 2018இல் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டனர்.


ஏற்கனவே, உக்ரைன் போர் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வட கொரியாவின் இச்செயல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண