500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் மன்னார் மற்றும் பூனேரியில் இரண்டு காற்றாலை மின்சார திட்டங்களுக்கு இந்தியாவின் அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார மற்றும் எரிசக்திதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் நிலையான எரிசக்தி அதிகார சபையின் அலுவலர்களை இன்று சந்தித்ததாக காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் டாலர் முதலீட்டிற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை சட்டத் திருத்தங்களினால் தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் மின்சாரம் கொள்வனவு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
26 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஏலம் விடப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், மின்சார விநியோக அமைப்புக்கும் மின் பரிமாற்றத்தையும் துரிதப்படுத்தப்பட உள்ளன. மற்ற முன்மொழிகள் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையில் காற்றாலை மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபகசவுக்கு மோடி அழுத்தம் கொடுத்தார் என சிலோன் மின்சார சபையின் தலைவர் கூறியிருந்த நிலையில், இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, அவர் திடீரென ராஜிநாமா செய்தார்.
காற்றாலை மின் திட்டத்தை அதானிக்கு நேரடியாக வழங்க பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்தார் என கோத்தபய ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக சிலோன் மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்ட் இலங்கை நாடாளுமன்ற குழுவிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனை ராஜபக்ச முற்றிலுமாக மறுத்த நிலையில், தான் சொன்ன கருத்தை பெர்டினாண்ட் திரும்பபெற்றார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை, சர்வதேச நிதியம் மற்றும் பிற நாடுகளின் நிதி உதவியை நாடியுள்ளது. சமீபத்தில்தான், இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. வரலாறு காணாத மக்கள் போராட்டத்தின் காரணமாக, அதிபர் பதவியிலிருந்து கோட்டபய விலகினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்