தென் கொரிய படங்களின் சிடிக்களை விற்பனை செய்ததாக வட கொரியா கடந்த 3 ஆண்டுகளில் 7 பேரை பொது இடைத்தில் வைத்து சுட்டுக்கொன்றது தெரியவந்துள்ளது. 


வட கொரியாவில் யாராவது தவறு செய்து விட்டால் உடனே மரண தண்டனை தான். வட கொரியா என்பது ஒரு மர்மமான நாடு என்று கூறப்படுகிறது. அங்கு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு கிம் ஜாங் உன் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் என்ன சொல்கிறாரோ அதுவே ஊடகங்களில் வெளிவரும். 


ஆனால் அதையும் மீறி அங்கு நடக்கும் பகீர் சம்பவங்கள் அவ்வபோது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வடகொரியாவுக்கு அருகில் இருக்கும் தென் கொரியா. அவைதான் வடகொரியா பற்றிய செய்திகளை அவ்வபோது உலகிற்கு கசியவிட்டுக்கொண்டு இருக்கிறது. 


வடகொரியாவின் செயல்கள் மனித உரிமையை மீறும் செயல் என கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால் அதை வடகொரிய அரசு கண்டுகொள்ளவில்லை. வட கொரியாவில் ஆபாச படம் தயாரிப்பது, விற்பது, பார்ப்பது போன்ற தவறுகளுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்பட்டு வருகிறது. இப்படித்தான் கடந்த மார்ச் மாதம் பள்ளி சிறுவன் ஒருவன் ஆபாசப்படம் பார்த்துள்ளான். அவனை கண்டறிந்து அவனுக்கு மட்டுமில்லாமல், அவனது குடும்பத்திற்கே தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை கொடுக்கவில்லை என்றாலும் வடகொரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். 




அந்த சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது அவருக்கு கூலி வேலை செய்யுமாறு  தண்டனை கொடுக்கப்பட்டது.  அதுமட்டுமில்லாமல் நாட்டின் சட்டங்களை மீறினால் மரணம்தான் என்று மக்களை மிரட்டும் வகையில், அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வதை வட கொரியா அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.


இந்நிலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரிய படங்களின் சிடிக்களை விற்பனை செய்ததாக வட கொரியா கடந்த 3 ஆண்டுகளில் 7 பேரை பொது இடைத்தில் வைத்து சுட்டுக்கொன்றது தெரியவந்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த டி.ஜே.டபிள்யு.ஜே பேட்டி எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 


அதில், “வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் முன்னிலையில் 27 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவை போதை மருந்து, விபசாரம், ஆள்கடத்தல், போன்ற குற்றங்களுக்காக அளிக்கப்பட்ட தண்டனைகள். 




எனினும் 2012 ஆம் ஆண்டு முதல் 2014 வரையிலான 3 ஆண்டுகளில் 7 பேர் தென் கொரிய திரைப்படங்கள், இசை ஆகியவற்றின் வீடியோ சிடிக்களை விற்பனை செய்தது, பார்த்தது போன்ற குற்றங்களுக்காக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொது இடங்களில் வைத்து மரண தண்டனை விதிப்பது மனித உரிமை மீறல் என தொடர்ந்து குரல் எழும்புவதால் தனி இடங்களில் வைத்து மரண தண்டனை விதிக்க வடகொரியா முடிவெடுத்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


முன்னதாக, வட கொரியாவை நிறுவிய கிம் இல் சங் மறைந்ததை தொடர்ந்து, 1994ல் நாட்டின் அதிபராக அவரது மூத்த மகன் கிம் ஜோங் இல் பதவி ஏற்றார். பின், 17 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கிம் ஜோங் இல் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி உயிரிழந்தார். இவரது மகனான கிம் ஜாங் உன் தற்போது அதிபராக உள்ளார். கிம் ஜோங் இல்லின் 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி, அடுத்த 10 நாட்களுக்கு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நாடு முழுதும் பொதுமக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மது அருந்துவது, ஷாப்பிங் செய்வது ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.