2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (Han Kang) இந்த விருது வழங்கப்பட உள்ளது. "வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் அகாடமி அறிவித்துள்ளது. 


 






யார் இந்த ஹான் காங்?


தென் கொரியாவின் க்வாங்ஜு பகுதியில் 1970ஆம் ஆண்டு பிறந்தவர் ஹான் காங். தன்னுடைய 9ஆம் வயதில் குடும்பத்தோடு சியோல் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். இலக்கியப் பின்னணியில் இருந்து வந்த இவரின் தந்தை, புகழ்பெற்ற நாவல் ஆசிரியர் ஆவார். எழுதுவதோடு இல்லாமல், கலை, இசை சார்ந்தும் ஹான் காங் இயங்கி வருகிறார். இது அவரின் இலக்கிய ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாக அமைகிறது என்று நோபல் அகாடமி புகழாரம் சூட்டி உள்ளது. 




முன்னதாக 2024ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து புரத வலைப்பின்னல் தொடர்பான ஆராய்ச்சிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 


வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பரிசு 3 பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் பாதியை டேவிட் பேக்கருக்கு "கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக" வழங்கவும், மீதி பாதியை டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்ப்பர் ஆகியோருக்கு "புரத அமைப்புக் கணிப்புக்காக" வழங்கவும் நோபல் அகாடமி முடிவு செய்துள்ளது.


இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (வெள்ளி ) அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல அக்டோபர் 14ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.