டாரன் அசேமொக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3 பேருக்கும் 2024ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை நாடுகளுக்கு இடையேயான செழிப்பில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய ஆய்வுகளுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
உலக நாடுகளில் 20 சதவீத பணக்கார நாடுகள், 30 சதவீத ஏழை நாடுகளைக் காட்டிலும் 30 மடங்கு அதிகமாக செழிப்புடன் இருக்கின்றன. ஏழை, பணக்கார நாடுகளுக்கு இடையேயான வருமான இடைவெளி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஏழை- பணக்கார நாடுகளுக்கிடையேயான இடைவெளி
ஏழை நாடுகள் பணக்கார நாடுகளாக மாறினாலும், ஏற்கெனவே பணக்கார நாடுகளாக உள்ளவற்றுடன் போட்டியிட முடியவில்லை. இது ஏன்?
இந்த ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெறும் விருதாளர்கள் இதற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து விரிவாக அறிய: https://www.nobelprize.org/uploads/2024/10/press-economicsciencesprize2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து படிக்கலாம்.
முன்னதாக 2024ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து புரத வலைப்பின்னல் தொடர்பான ஆராய்ச்சிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பரிசு 3 பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் பாதியை டேவிட் பேக்கருக்கு "கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக" வழங்கவும், மீதி பாதியை டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்ப்பர் ஆகியோருக்கு "புரத அமைப்புக் கணிப்புக்காக" வழங்கவும் நோபல் அகாடமி முடிவு செய்தது.
இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 14ஆம் தேதி) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.