ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக தங்களின் நிலபரப்பையே வான் தளத்தையோ இஸ்ரேலுக்கு அளித்து உதவக் கூடாது, அப்படி செய்தால் கடுமையான பதிலடி தரப்படும் என என அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேற்காசியா முழுவதும் போரால் பற்றி எரிந்து வருகிறது. காசாவில் தொடங்கிய போர் ஈரான் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் அமைந்தது.


எச்சரிக்கை விடுத்த ஈரான்:


பதில் தாக்குதல் நடத்துகிறோம் என சொல்லி போரில் இறங்கிய இஸ்ரேல், பிரச்னையை மத்திய கிழுக்கு நாடுகள் முழுவதும் பரவ செய்துள்ளது. காசா போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது சிறிய சிறிய தாக்குதலை நடத்தி வந்தது லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா. 


காசாவில் ஏற்கனவே 40,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம், லெபனானில் தாக்குதலை தொடங்கியது. பேஜர், வாக்கிடாக்கி தாக்குதல் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்ரேலே காரணம் என சொல்லப்படுகிறது.


இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஈரான், இஸ்ரேல் நாடுகள் இரண்டும் நேரடியாக போரில் குதித்துள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது.


பின்வாங்கும் நட்பு நாடுகள்:


இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த போரில் இஸ்ரலுக்கு உதவ வேண்டாம் என அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அரபு நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் அமெரிக்காவின் நட்பு சக்திகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு தங்களின் தூதர்கள் மூலம் ஈரான் ரகசியமாக எச்சரிக்கை விடுத்திருப்பதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.


ஈரான் விடுத்த எச்சரிக்கையின் விளைவாக தங்களை இந்த போரில் இழுத்துவிட வேண்டாம் என பைடன் அரசாங்கத்திடம் அதன் நட்பு நாடுகள் கூறியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பில் இருக்கும் தங்களின் எண்ணெய் கிணறுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அதன் நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.