கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார். அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக்கு உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.
இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு:
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்பாக ஆய்வு செய்ததற்காக பியர் அகோஸ்டினி, பேரன்க் கிராஸ், அன்னே எல்'ஹுல்லியர் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரான்கள் நகரும் செயல்முறைகளை அளவிடப் பயன்படும் ஒளியின் வெளிச்சத்தை உருவாக்குவதற்கான வழியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மிக குறுகிய காலக்கட்டத்தில், அதாவது அட்டோசெகண்டுகளில் பத்தில் ஒரு பங்கு அவகாசத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க இவர்களின் ஆய்வு உதவுகிறது.
இவர்கள் கண்டுபிடித்துள்ள ஒளியின் வெளிச்சம் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் நிகழும் படங்களை வழங்க பயன்படுத்தப்படலாம். பல ஆண்டுகளாக, இவர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து வந்துள்ளனர். மிக மிக வேகமாக நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பது மிகக் கடினம். தற்போது, இவர்களின் ஆய்வு, வேகமாக நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க உதவுகிறது.
எலக்ட்ரான்கள் தொடர்பான ஆய்வு:
எலக்ட்ரான்கள் ஒரு பொருளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்த புதிய ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட், ஜான் கிளாசர் மற்றும் அன்டன் ஜெயிலிங்கர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. குவாண்டம் இயக்கவியல் தொடர்பான ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அக்டோபர் 4 ஆம் தேதி, வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்க உள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.