இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மலாலா, “ இந்த நாள் எனது வாழ்வின் பொன்னான நாள், அஸரும் நானும் வாழ்கை துணையாக இருக்க முடிவு செய்துள்ளோம். எனது குடும்பத்துடன் ப்ர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்களது பிரார்த்தனைகளை எனக்கு அனுப்புங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மலாவின் இந்த ட்விட்டர் பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தனது கணவர் தொடர்பான வேறு விபரங்களை மலாலா குறிப்பிடவில்லை. ஆனால் நெட்டிசன்கள் பலர் மலாலா கணவரின் முழுப் பெயர் அஸர் மாலிக் என்றும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
அண்மையில் மலாலா பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வாழ்கைக்கு ஒரு துணைவர் வேண்டுமென்றால், பிறகு ஏன் திருமண பத்திரங்களில் கையெழுத்து இடுகிறீர்கள். அது வெறும் பாட்னர்ஷிப்பாக மட்டும் ஏன் இருக்க கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
முன்னதாக, பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில், மரணத்தின் இறுதிகட்டத்திற்கு சென்ற மலாலா உயிர் தப்பினார். அதனைத் தொடர்ந்து தனது கருத்துக்களை மலாலா இன்னும் வலுவாக முன் வைக்கத் தொடங்கினார்.
2013 ஆம் ஆண்டு மலாலா தனது 16 ஆவது பிறந்தநாளான ஜூலை 12-ல் ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அன்றைய தினத்தை "மலாலா தினம்" என்று அறிவித்தது.
பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து போராடி வரும் மலாலாவுக்கு, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார். பெண்களின் உரிமை மட்டுமல்லாமல் சர்வதேச அமைதிக்காகவும் மலாலா. குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.