மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, திருமணம் என்பது சுலபமானது அல்ல என பேசிய கருத்து வைரலாகியுள்ளது.


ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து:


இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான கனடாவின் பிரதமராக, கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜஸ்டின் ட்ரூடோ  பதவி வகித்து வருகிறார். இந்திய பண்டிகளை கொண்டாடுவது, இந்தியாவின் பாரம்பரியத்தை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளால், நமது நாட்டிலும் பெரும்பாலானோர் அவரை அறிந்திருக்கின்றனர். இந்நிலையில் தான், திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனைவி சோபி கிரெகோயரை பிரிவதாக அறிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு 15 வயதில் சேவியர், 14 வயதில் எல்லா கிரேஸ்  மற்றும் 9 வயதில் ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.


திருமண விவரம்:


கனடாவின் முன்னாள் பிரதமரான பீரே எல்லியட்டின் மகன் தான் ஜஸ்டின் ட்ரூடோ. மறுபக்கம், கிரேகோயர் ஊடகத்தில் நிரூபராக பணியாற்றி வந்தார். சிறுவயதில் இருந்தே நண்பர்களான ட்ரூடோ(51), சோபி கிரெகோயர் (48) கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதைதொடர்ந்து, சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவின் பிரதமராக ட்ரூடோ பொறுப்பேற்றதன் மூலம், ட்ரூடோ - கிரெகோயர் தம்பதி சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 


வைரலாகும் கருத்து:


இந்நிலையில் வெளியாகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் விவாகரத்து விவகாரம் கனடாவை தொடர்ந்து இந்தியாவிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சூழலில்,  கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி குறித்து, ட்ரூடோ பொதுவெளியில் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


”திருமணம் ஈசி இல்லிங்க”



  • 2014ம் ஆண்டு வெளியான சுயசரிதையில் ”எங்கள் திருமணம் சரியானது அல்ல, எங்களுக்கு கடினமான ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனாலும் சோஃபி எனது சிறந்த தோழியாக, என் துணையாக, என் காதலியாகவே இருக்கிறார். எங்களுக்கு வலியை கொடுத்தாலும் கூட நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்கிறோம்” என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

  • 2015ம் ஆண்டு அளித்த பேட்டியின்போது “எந்த திருமனமும் சுலபமானது இல்லை” என தெரிவித்து இருந்தார்

  • கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்த பதிவில் “ 17 ஆண்டுகளுக்கு முன்பு முதல் டேட்டிற்காக நாங்கள் சென்று இருந்தோம். அந்த அளவிற்கு நாங்க இப்போது இளமையாக இல்லை, ஆனால் இது ஒரு சிறப்பான பயணமாக அமைந்துள்ளது. எல்லா ஏற்ற தாழ்வுகளிலும், நீங்கள் இன்னும் என் நபர். நான் உன்னை நேசிக்கிறேன்” என கிரெகோயர் பதிவிட்டு இருந்தார்.  இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


விவாகரத்து தொடர்பான பதிவு:


இதனிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்து வாழ்வது தொடர்பாக தங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், "அனைவருக்கும் வணக்கம். சோபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.