பிரேசிலின் சாவோ பவுலோ நகரத்தில் 13 பயங்கரவாதிகள் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


தென் அமெரிக்கா நாடான பிரேசிலின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக சாவோ பவுலோ உள்ளது. இந்த நகரின் கவுருஜா மற்றும் சான்டோஸ் பகுதிகளில் சமூக விரோத பயங்கரவாத செயல் அதிகமாக உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார்கள் விரைந்தனர். அங்கு சோதனை மேற்கொண்ட போது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.


இந்த சம்பவத்தையடுத்து பயங்கரவாதிகள் பிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். சுமார் 600 க்கும் மேற்பட்ட சிறப்பு படை வீரர்கள்  அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்பேரில் இதுவரை 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 30 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை ராணுவ வீரர்களால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்ப்ட்டது. மேலும் பலரை ராணுவத்தினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதல்: 


உலக அளவில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அதற்கு அவ்வப்போது ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகிறாரகள். கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தனர். 120 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வடமேற்கு பாகிஸ்தானில் அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் கட்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கர் நகரில் தாக்குதல் நடந்தபோது 500 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பின்னர் அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விசாரணையின் போது, மர்ம  நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை படையாக செயல்பட்டது தெரிய வந்தது.


இந்த சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 40 க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது. மேலும் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. தற்கொலை படை வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை,  ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் கட்சியை குறிவைத்து சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.