தென் அமெரிக்க நாடான சிலியில் ஹெலிகாப்டர் வெடித்து 5 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
லாஸ் லாகோஸ் பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான சிலி விமானப்படை (FACH) ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பேரும் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. ஏவியேஷன் குரூப் எண். 5 க்கு சொந்தமான பெல் -412 விமானம் சான் ஜுவான் டி லா கோஸ்டாவின் கம்யூனில் உள்ள லா கும்ப்ரே பகுதியில் சுமார் இரவு 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானது என செய்திகள் வெளியானது.
சம்பவத்தின் போது, அந்த விமானம் இரவு விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு விமானப்படை வீரர்கள், இரண்டு விமானிகள் மற்றும் ஒரு சிறப்புப்படை வீரர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பான அனைத்து தகவல்களும் விமான போக்குவரத்து வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த விபத்தில் இறந்த எங்கள் தோழர்களின் குடும்பங்களுக்கு சிலி விமானப்படை உதவி மற்றும் ஆதரவை வழங்குகிறது, எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என சிலி விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சான் ஜுவான் டி லா கோஸ்டாவின் லா கம்ப்ரே செக்டரில் விமான விபத்துக்குப் பிறகு சிலி விமானப்படை அதிகாரிகள் மற்றும் கராபினெரோஸின் பிராந்திய தலைவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவசரக் குழுக்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளோம்,” என்று லாஸ் லாகோஸ் பிராந்திய ஜனாதிபதி பிரதிநிதி ஜியோவானா மொரேரா ட்விட்டர் மூலம் தெரிவித்தார். மேலும் அவர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டார்.
"கராபினெரோஸ் வழங்கிய தகவலின்படி, ஐந்து பேர் இறந்துள்ளனர். எனவே சிலி விமானப்படை மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என்று ஒசோர்னோ மாகாண ஜனாதிபதி பிரதிநிதி கிளாடியா பைலலெஃப் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். இந்த விபத்து தொடர்பாக ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.