ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியதாகக் கூறப்படும் விசாரணையில், கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டிற்கான ஆஃப்கானிஸ்தான் தூதரின் மகள் கடந்த 18ஆம் தேதி இஸ்லாமாபாத் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகேலின் 26 வயது மகளான சில்சிலா அலிகேல் பகலில் வெளியே சென்றுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அப்போது அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கும்பல் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக அவரை கட்டி வைத்து சித்தரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில்,"நேற்று எங்கள் நாட்டு தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு 5 மணி நேரத்திற்கும் மேலாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடம்பில் கயிறு கட்டியது போன்ற சில காயங்கள் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை ஆஃப்கானிஸ்தான் அரசு அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம்,"இது மிகவும் வருந்தத்தக்க செயல். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இந்த வேலையை செய்துள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் தூதர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆகியோருக்கு அதிகளவில் தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியதாகக் கூறப்படும் விசாரணையில், 700 மணி நேர சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளோம், 200 டாக்ஸிகளைத் தேடினோம். ஆனால், கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் பாகிஸ்தானை இழிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும். பாகிஸ்தான் இந்த வழக்கில் இருந்து பின்வாங்காது. சில்சிலா அலிகில் விசாரணைக்கு உதவ வேண்டும்” என்று கூறினார்.
தலிபான் படைகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவிகளை செய்து வருகிறது என்று தொடர்ச்சியாக ஆஃப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வந்தது. இதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஆப்கானுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆஃப்கானிஸ்தானில் பெரியளவில் போர் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. அதை தற்போது அங்கும் நிலவும் சூழல் உறுதி படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.