புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர்பெற்ற சீனா மற்றொருமொரு அசத்தல் கண்டுபிடிப்பை அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 600 கிமீ வேகத்தில் பறக்கும் ரயிலை கண்டுபிடித்துள்ளது சீனா. மேக்லேவ் என்ற தொழில் நுட்பம் மூலம் இந்த ரயிலை சீனா தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மின் காந்த தொழில்நுட்பம் மூலம் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தில் தண்டாவளத்தில் படாமலேயே பறக்குமாம் இந்த ரயில். ஒரு துருவ காந்தங்களுக்கு இடையே தண்டாவளமும், ரயிலும் இருப்பதால் மிதப்பது போல பறக்கும் இந்த ரயில். இதுவே இந்த ரயிலின் அதிவேகத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்... இந்த 5 ரயில்வே தடங்களைப் பாருங்க.. கண்டிப்பா இப்போ டூர் போகத்தோணும்..!


அதிவேக ரயிலுக்கு ஜெர்மனி, ஜப்பான், சீனா இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் இந்த அசத்தல் ரயிலை சீனா கண்டுபிடித்து மற்ற நாடுகளை அசர வைத்துள்ளது. 
இந்த ரயிலின் வேகம் குறித்து பேசியுள்ள சீனா, இந்த மிதக்கும்ரயிலின் வேகம் மணிக்கு 600கிமீ. குயிங்டாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் 1300கிமீ தூரம் கொண்ட ஷாங்காய் - பெய்ஜிங் பயணம் வெறும் 2.5 மணி நேரத்தில் சாத்தியப்படும். இந்த தூரத்தை இப்போது விமானத்தில் கடக்கவே 3 மணி நேரமாகிறது. இதுவே புல்லட் ரயில் என்றால் 5 மணி நேரத்திற்கு மேலாகும். அதாவது சென்னையில் காலை 8 மணிக்கு ரயில் ஏறினால் 10. 30 மணிக்கு மும்பை சென்று காலை சாப்பாடு சாப்பிடலாம். அவ்வளவு வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில்.




அதிக செலவாகும் என்பதால் இந்த தொழில்நுட்பத்தை தற்போது சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், தென் கொரியா போன்ற நாட்கள் மட்டுமே ஆய்வில் வைத்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வில் இருந்த தொழில் நுட்பத்தை இப்போது சீனா ஒரு நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது.


இந்தியாவில் இன்னும் புல்லட் ரயிலே சாத்தியப்படாத நிலையில் சீனா காந்த விசை மூலம் பறக்கும் ரயிலை கண்டுபிடித்து முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா அதன் தேவைக்கு ஏற்ப சில கண்டுபிடிப்புகளை சாத்தியமாக்கி வருகிறது. அதேவேளையில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இந்தியா எந்த நிலையில் போக்குவரத்து வசதிகளுக்கு கவனம் செலுத்துகிறது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.