கொரோனா பாதித்த பெண் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதற்கு முன் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவேண்டும். இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும். தாய்ப்பால் ஊட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் குழந்தையிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தாய்மார்களுக்கு இதுகுறித்த அச்சம் அதிகரித்தாலோ, கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தாலோ, தாய்ப்பால் அளிக்கும் நிலையில் அவர் இல்லாமல் இருந்தாலோ மட்டும் தாய்ப்பால் தவிர்த்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பவுடர் உணவுகள் கொடுக்கலாம். செயற்கை உணவுகள் கொடுக்கும்போது குழந்தைக்கு கொரோனா தவிர்த்த வேறு தொற்றுகள் வர வாய்ப்புகள் அதிகம். அதனால் கொரோனா வந்த நிலையிலும் தாய்ப்பால் கொடுப்பதே குழந்தைக்கு நல்லது என கடந்த கொரோனா அலைகளின்போதும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதைப் பார்த்துவருகிறோம்.


எனினும் தொடர்ச்சியாக கோவிட் குறித்த விளக்கங்களை அளித்துவரும் உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளுக்கு பின்பு சில தகவல்களை தெரிவித்துள்ளது. “கர்ப்பிணி தாயிடமிருந்து குழந்தைக்கு கருவிலேயே கொரோனா பரவுவதும், தாய்ப்பால் மூலமாக கொரோனா தொற்று பரவுவதும் மிகவும் அரிதான ஒன்று. அதுமட்டுமில்லாமல் தாய்ப்பாலில் வைரஸின் இருப்பு  கண்டறியப்படவில்லை” என தெரிவிக்கிறது.














உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் டெட்ரோஸ், “பல நாடுகளில், கொரோனா அச்சம் காரணமாக, பிறந்த குழந்தையிடம் இருந்து தாய்மார்கள் பிரித்துவைக்கப்படுவதை அறிகிறோம். இது குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு அச்சுறுத்தல் விளைவிக்க கூடிய செயலாக இருப்பதை நினைத்து அச்சம் கொள்கிறோம். இந்த நிலை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.