ராணுவ தினத்ததை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி எம்.எம். நரவானே தெரிவித்ததாவது, "எல்லை பகுதியில் பல்வேறு முகாம்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. எல்லையில் கட்டுப்பாட்டு பாதை வழியாக ஊடுருவும் முயற்சிகள் நடக்கிறது.


லடாக்கில் சில இடங்களில் படைகள் திரும்ப பெறப்பட்டுவிட்டது. ஆனாலும் அச்சுறுத்தல் குறைவது போல் தெரியவில்லை. சீன ராணுவத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், நமது நாட்டு ராணுவப் படைகளின் செயல்பாடுகளை எப்போதும் தயார் நிலையிலேயே வைத்து உள்ளோம். வடக்கு எல்லைகளின் கட்டமைக்க தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற்று வருகிறது.


சீன ராணுவத்தின் புதிய எல்லை சட்டங்கள் மூலம், எந்த வித ராணுவ மாற்றங்களையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பிற நாடுகளுக்கு உடன் படாததும், சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்ததும், சென்ற காலங்களில் செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத எந்த சட்டமும் வெளிப்படையாக நம்மை கட்டுப்படுத்த இயலாது. நிலையான முடிவோடு சீன ராணுவத்தை உறுதியுடனும், ஆக்கப்பூர்வமாகவும் கையாளுவோம்.


சீனாவுடன் ராணுவ ரீதியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறு பாடுகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நம் மீது திணிக்கப்படும் எந்த சவாலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இதனை நான் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். போர் அல்லது மோதல் எப்போதும் கடைசி முயற்சியாக தான் இருக்கும். மோதல் துவக்கப்பட்டாலும் அதில் நாம் வெற்றி பெறுவோம், தயாராக உள்ளோம்" என ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.


கடந்த டிசம்பர் 4 அன்றுநாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சேகத்தை ஏற்படுத்தியது. இதில், பொதுமக்கள் 13 பேர் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகினர்.


“இந்த துயர சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ நடவடிக்கையின் போதும், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு உறுதி கொண்டுள்ளோம்”  எனவும் தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.


இந்திய முப்படை தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கோவை வெலிங்டன் பயிற்சி மையத்தில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ஹெலிகாப்டரில் பயணம செய்த 14 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.