கைலாசா அதிபர் நித்யானந்தாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து தான் ஏன் வெளியேறினேன் என்று பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது.


நித்யானந்தாவின் யூடியூப் பக்கத்தி 8 நிமிட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ எடுக்கப்பட்ட காலம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், நேரடி ஒளிபரப்பாக அந்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தான் ஏன் இந்தியாவில் இருந்து வெளியேறினேன் என்பது குறித்தும், கைலாசாவை தான் எப்படி உருவாக்கியிருக்கிறேன் என்றும் நித்யானந்தா பேசியுள்ளார்.


”இந்தியாவை ஏன் விட்டு வெளியேறினேன்?”


அந்த வீடியோவில், இந்தியாவில் பெரும் சாம்ராஜ்யத்தை கட்டமைத்துவிட்டு ஏன் அங்கிருந்து வெளியேறி எங்கோ ஓர் மூலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் இந்தியாவில் இருந்து வெளியேறி மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த மூன்று ஆண்டுகளும் மதிப்பு மிக்கவை. சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட இடத்தை முதலில் உருவாக்கியிருக்கிறேன். சரியான விஷயங்கள் முதலில் செய்யப்பட்டன. நமக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. நாம் கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.  



10 ஆண்டுகளில் கற்ற பாடம்:


ஆசாரம் பாபுவின் அமைப்புக்கு என்ன நடந்தது, சந்த்ராம் பால், ராம் ரஹூம், பால்கர் சாது, காஞ்சி மடம் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. சிறிது நேரம் அமர்ந்து ஒன்றை நினைத்துப் பாருங்கள். ஆசாராம் பாபு, ராம் ரஹூம், காஞ்சி மடம், சந்த்ராம் பால், சிவசங்கர் பாபா ஆகியோரின் இந்து அமைப்புகள் கடின உழைப்பால் தேன் அடை போன்று உருவானவை.  ஆனால் சில திருடர்கள் உள்ளே புகுந்து அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். மீண்டும் கடினமாக உழைத்து தேன் அடை போன்று ஒரு இந்து அமைப்பை கட்டமைத்தால், மீண்டும் ஒருவர் உள்ளே புகுந்து அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிடுவார். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு இந்த விளையாட்டில் ஆர்வமில்லை. அதனால் தான் நான் முதலில் சரியான கல்லைக் கொண்டு முதலில் கோட்டையை கட்டினேன். அதன் பிறகே தேன்அடையை கட்டினேன். எனவே இது எப்போதும் இருக்கும். எப்போதும் இந்துக்களுக்காக வேலை செய்யும். நான் இந்த ரகசியத்தை புரிந்து வைத்திருக்கிறேன். நான் என் 16வது வயதில் பொது வாழ்க்கையை தொடங்கினேன். பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நானும் எனது சந்நியாசிகளும் போடும் எந்த கடின உழைப்பும் தேன்அடை போன்றவை என்பதை என் 25 வயதில் பத்து ஆண்டுகளுக்குள்ளாக நான் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார். 




மேலும், காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யபட்டபோது நான் தெளிவாக ஒன்றை புரிந்துகொண்டேன். கடந்த 2 தலைமுறைகளுக்கு முன்பாக, இந்தியா மதச்சார்பின்மையை ஏற்றுக்கொள்ளும் வரை, காஞ்சிமடம் மற்றும் மதுரை ஆதினமும் ஆங்கிலேய அரசிடமிருந்து அவர்கள் ஆட்சி முடியும் வரை பாதுகாப்பைப் பெற்றிருந்தன. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு அதன் குருக்கள் தவறாக குற்றம்சாட்டப்படுகிறார்கள். ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார் தான் ஒரு நிரபராதி என்று நிரூபித்து வெளியே வந்தார். ஆனால், அவரது மடத்திற்கு என்ன ஆனது? அவருக்கு என்ன நடந்தது? இந்துக்களுக்கு எதிரானவர்கள் உண்மையான இந்துக்களை தாக்கினார்கள். ஏனென்றால் அவர் இந்துக்களுக்காக நின்றார். 


”நாம் பாதுகாப்பாக இருகிறோம்:”


இதை நான் தெளிவாக புரிந்துகொண்டேன். நான் முறையான சட்டபாதுகாப்பை கொடுக்கவில்லை என்றால், 100 ஆண்டுகள் வேலை பார்த்து இந்து கட்டமைப்பை உருவாக்கினாலும், என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்லமுடியாது. நான் எனது சீடர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கான நல்ல செய்தியை உங்களுக்காக வைத்திருக்கிறேன் என்றால், பரமசிவனின் அருளால் நமக்கு ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் வகையிலான ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் கைலாசாவிற்கு இருக்கிறது. பல நாடுகளுடன் ராஜதந்திர உறவு கைலாசவிற்கு இருக்கிறது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கப் போகிறோம். எனவே நீங்கள் கைலாசாவிற்காகப் போடும் உங்கள் உழைப்பு, திறமை, நேரம், செல்வம் ஆகியவை எப்போதும் பயன்படுபவை. இதை யாராலும் கொள்ளையடிக்கவோ, அழிக்கவோ முடியாது.  ஏனென்றால் நான் முறையான அடித்தளம் இட்டு பாதுகாப்பான கோட்டையை உருவாக்கியிருக்கிறேன். அதன்பிறகு தான் கட்டிடமே கட்ட ஆரம்பித்திருக்கிறேன் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.