கலிபோர்னியாவின் சான் மேடியோ கவுண்டியில் நேற்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், மூன்று நாட்களில் காலிபோர்னியாவில் இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.






கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் இரண்டு தினங்களுக்கு முன் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் நடந்து 2 தினங்களில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 67 வயது நபர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் அமெரிக்காவின் டெஸ் மொயின்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு  மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்து பலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த மூன்று பேரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களில் இரண்டு மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் வேலை செய்யும் ஊழியராவார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.


இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 


அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.